
மத்தியில் உள்ள பாஜக அரசு ஆயுதப் படைகளில் இளைஞர்களைச் சேர்க்கும் வகையில் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு வட மா நிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், பாஜகவினர் அத்திட்டத்துக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். அந்த வகையில் இந்தூரில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கி பேசியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அக்னிபத் திட்டம் பற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராணுவத்தில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் அக்னி வீரர்கள் ரூ.11 லட்சத்துடன் வருவார்கள். அத்துடன் அக்னி வீரர்கள் என்ற பெருமையும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் சர்ச்சையைக் கிளப்புகின்றன. பாஜக அலுவலகத்தில் எனக்கு பாதுகாவலர்கள் இருந்தால், நான் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன்.” என்று பேசியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையானது. அது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அவருக்கு எதிராக பலரும் பதிவிடத் தொடங்கினர்.
“ராணுவ வீரர்களை பாஜக தலைவர் அவமதித்து விட்டது. அக்னி வீரர்கள் பாஜக அலுவலகத்தின் வாட்ச்மேனாக மாறும் நிலை குறித்துதான் அஞ்சுகிறோம்” என்று மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதேபோல டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக எம்.பி. வருண்காந்தி உள்ளிட்டோரும் கைலாஷ் விஜய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், “தன்னுடைய கருத்துகளை காங்கிரஸ் கட்சி திரித்துவிட்டது. ராணுவ பணிகளை முடித்தபின் எந்தத் துறையிலும் அக்னி வீரர்களை பணியில் அமர்த்த முடியும் என்பதைத்தான் நான் கூறினேன்” என்று கைலாஷ் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.