நான்தான் விட்டுத் தரணுமா.? இபிஎஸ் விட்டுக்கொடுக்க மாட்டாரா.? கடுங்கோபத்தில் ஓபிஎஸ்.. பொதுக்குழு நடைபெறுமா?

By Asianet TamilFirst Published Jun 20, 2022, 7:07 AM IST
Highlights

ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் தலைவலியாக மாறியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி எரியும் நிலையில், அந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். ஓ. பன்னீர்செல்வமோ இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2020-ஆம் ஆண்டில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் விஷயத்திலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. அப்போது ஓபிஎஸ்ஸை அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சமாதானப்படுத்தியதைப் போல, தற்போதும் சமாதனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜூ ஆகியோர் பழனிசாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் தெரிவித்த கருத்துகள் பரிமாறப்பட்டன. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பதவியை விட்டு தரும்படியும் மூத்த தலைவர்கள் ஓபிஎஸ்ஸிடம் வற்புத்தியுள்ளனர். ஆனால், முதல்வர் பதவி, கட்சியில் அதிகாரம், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லாவற்றையும் தானே விட்டுக்கொடுப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்கமாட்டாரா என்று மூத்த தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய ஓபிஎஸ், இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக ஒபிஎஸ் தரப்பு சொல்கின்றன.

அதேவேளையில் ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக நின்றாலும். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதில் எடப்பாடி பழனிச்சாமியும் உறுதியாக இருப்பதாக அவருடைய தரப்பு சொல்கிறது. ஒற்றைத் தலைமை விஷயத்தில் ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டைவெளிப்படையாக பொதுவெளியிலேயே அறிவித்து விட்டார். ஆனால், இபிஎஸ் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. எனவே, இபிஎஸ் இந்த விஷயத்தில் முழு மூச்சாகவே களமிறங்கியுள்ளார். அதற்கேற்றார் போல அதிமுகவில் 64 மாவட்டச் செயலாளர்கள் இபிஎஸ்ஸையும் 11 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதும் தெரிய வந்துள்ளது. அதோடு, கட்சியின் வழக்கறிஞர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, இளம்பெண்கள் பாசறை அணி போன்ற அணிகள் எடப்பாடி பழனிச்சாமி தங்களுடைய ஆதரவை  தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் சமரச பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட வழிகாட்டுதல் குழு, 14 பேரைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைத்தல், அவர்கள் பரிந்துரைகளை மட்டும் கட்சியில் செயல்படுத்துவது, அதோடு இரட்டை தலைமை என்பதிலேயே ஓபிஎஸ் குறியாக இருக்கிறார். ஆனால், இதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கட்சிக்கு ஒற்றைத் தலைமை வந்தால் தன்னை ஓரங்கட்டிவிடுவார்கள் என்பதையும் ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். ஒற்றைத் தலைமையில் இபிஎஸ் தரப்பு உறுதியாக இருக்கும்பட்சத்தில். ஓபிஎஸ் தரப்பு ஜூன் 23 அன்று பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் இறங்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடும் பணிகளையும் சைலண்டாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு இறங்கி வராமல் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் சூழலில், அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி ஜூன் 23 அன்று நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்குமோ என்ற அச்சத்திலும் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள். 

click me!