
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகக் கூறி மூன் மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் தந்த தகிப்பால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் குறித்து ஸ்டிங் ஆபரேஷனை நடத்தி பரபரபு கூட்டியிருக்கிறது ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சி.
அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு உதயகுமார் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று வருகிறார் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு வீடியோ ஒன்றை ரிபப்ளிக் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. அதில் மாணவி போல வரும் பெண் ஒருவர், வெளிநாடுகளில் இருக்கும் தனது நண்பர்கள், உங்களது போராட்டத்திற்கு நிதி உதவி அளிக்க விரும்புகின்றனர் என்று கூறுகிறார். இதற்கு உதயகுமாரும் சிலவற்ற விவரிக்கிறார். இப்படியாக விரிகிறது அந்த வீடியோ.
இந்நிலையில் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அவதூறு பரப்பிய ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் உதயகுமார் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதயகுமார் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்வேதா சர்மா மற்றும் சஞ்சய் ஆகியோர் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் என்று என்னிடம் அவர்களை அறிமுகம் செய்தனர். நானும் அவர்களது படிப்புக்குத் தேவையான புத்தகங்களை அளித்து உதவி செய்தேன்.
இதனைத் தொடர்ந்து ஒரு நாள், என்னுடைய போராடடத்திற்கு லண்டனில் இருக்கும் ஸ்வேதாவின் பேராசிரியர் நிதி உதவி அளிக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதை விரும்பவில்லை என்றும், மாறாக இந்தியாவில் இருப்பவர்கள் பணம் அளித்தால் அதற்கு ரசீது தரவும் தயாராக இருப்பதாகக் கூறினேன்.
இந்த உரையாடல்கள் ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சி கடந்த 20 ஆம் தேதி நடத்திய விவாதத்திலும் நான் கலந்து கொண்டு விளக்கம் அளித்தேன்.
ஆனால் அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஷ்வாமி என்னை வேண்டும் என்றே அவமானப்படுத்தி விட்டனர். எனது வீட்டின் முன்பு நின்று கொண்டு ஸ்டிங் ஆபரேஷன் குறித்து விளக்கம் அளிக்கும்படி எனது வயதான பெற்றோரை ரிபப்ளிக் தொலைக்காட்சி தொந்தரவு செய்துள்ளது. மக்களுக்கு எதிரான அந்தத் தொலைக்காட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.