எச்சரிக்கை.. முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் தீவிரம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 12, 2021, 12:19 PM IST
Highlights

கடந்த 8 ஆம் தேதி முதல் 2 ஆயிரத்து 351 பேர் மீது முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த சில மாதங்களாக வைரஸ் காட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. முதல் அலையை விட இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளன. 

இந்நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை காவல்துறையினரும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்கள் மற்றும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 62 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 8 ஆம் தேதி முதல் 2 ஆயிரத்து 351 பேர் மீது முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாத 119 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு 59 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
 

click me!