அரசியலில் பெரிய ஆளாக வளர வேண்டுமா..? ஜெயலலிதாவின் உதவியாளர் கொடுக்கும் அசத்தல் டிப்ஸ்..!

By Thiraviaraj RMFirst Published Apr 28, 2021, 12:26 PM IST
Highlights

நாம் வாங்கி வந்த வரம் அப்படி என்று கடந்து விடுங்கள். அதுவே நமது உடலிற்கும், குடும்பத்திற்கும் நல்லது என ஜெயலலிதாவின் உதவியாளர் சங்கரலிங்கம் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
 

 போராடவில்லை என்றால் அரசியலில் நாம் காணாமல் போய்விடுவோம். இல்லையென்றால் மறந்து விடுவார்கள். ஒருவேளை சிலர் நினைக்கலாம், கடைசிவரை போராடினேன் ஒன்றும் கிடைக்கவில்லையே என்று, நாம் வாங்கி வந்த வரம் அப்படி என்று கடந்து விடுங்கள். அதுவே நமது உடலிற்கும், குடும்பத்திற்கும் நல்லது என ஜெயலலிதாவின் உதவியாளர் சங்கரலிங்கம் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘’அரசியலில் வளர நினைப்பவர்களுக்கு! அரசியலில் இன்றில்லை என்றாவது ஒரு நாள் வளர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். அந்த நம்பிக்கை இல்லாமலே சிலர் பயணித்து கொண்டிருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்வு. இதுவே நிதர்சனம். அரசியலில் காத்திருக்க பழக வேண்டும். உயர்வுகளை கொடுத்து உயர்த்த நினைப்பவருடன் பழக வேண்டும். பயணிக்க வேண்டும்.  இவருடன் பழகுவது காலவிரயம் என்று நினைத்தால் நாசூக்காக விலகிவிடவேண்டும். தான் செல்லும் பாதை தவறு என்று தெரிந்தவுடன் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து செல்பவன் மட்டுமே சாதனையாளராகிறான் என்கிறது வரலாறு.

அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு சிலருக்கே! ஒன்றரை கோடி தொண்டர்களில் 234 பேரை மட்டுமே தேர்தலில் நாம் நிற்க வைக்க முடியும். இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அரசியலில் எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது முடியாத காரியம். சிலர் திறமையில் வருவார்கள். சிலர் அதிர்ஷ்டத்தில் வருவார்கள். சிலர் சிபாரிசில் வருவார்கள். 234 வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இல்லை என்று நினைப்பதைவிட அடுத்தமுறை பெயர் இருப்பதற்கான வியூகத்தை வகுத்து செயல்படவேண்டும்.

 இதில் அவரவர் தகுதிக்கேற்ப ஆசைப்படவேண்டும். தகுதிக்கு மீறிய ஆசை நம்மை காயப்படுத்தும். கட்சியில் நிறைய பதவிகள் இருக்கின்றன. அதில் தகுந்த பதவியை பெற முயற்சிக்க வேண்டும். பிடிக்குதோ இல்லையோ தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட முயலவேண்டும். இல்லை தலைமைக்கு உண்மை நிலையை சொல்லி கட்சிக்கு நல்லதை செய்ய முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் உயர்ந்த நிலைக்கு வந்தபிறகு நீங்கள் விரும்பியவற்றை நடைமுறைப்படுத்த முயலவேண்டும். பதவியில் வருவதற்கு முன்பே முயற்சித்தால், நாம் வளர முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நீ நீயாக இரு. முதலில் அரசியலை கவனி. அரசியலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யுங்கள். நமக்கு இருக்கும் பிளஸ், மைனஸ் என்ன என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு அடியெடுத்து வையுங்கள். தலைவர்களுக்கு ஏற்ப அரசியலும் மாறிக்கொண்டிருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். 'ஒருநாள் ஜெயிப்போம்' என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். ஜெயிக்கும் வரை போராடி கொண்டிருக்க வேண்டும். போராடவில்லை என்றால் அரசியலில் நாம் காணாமல் போய்விடுவோம். இல்லையென்றால் மறந்து விடுவார்கள். ஒருவேளை சிலர் நினைக்கலாம், கடைசிவரை போராடினேன் ஒன்றும் கிடைக்கவில்லையே என்று, நாம் வாங்கி வந்த வரம் அப்படி என்று கடந்து விடுங்கள். அதுவே நமது உடலிற்கும், குடும்பத்திற்கும் நல்லது.

அரசியலில் வளர நினைப்பவர்களுக்கு! அரசியலில் இன்றில்லை என்றாவது ஒரு நாள் வளர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை முதலில்...

Posted by J Poongunran Sankaralingam on Tuesday, 27 April 2021

 

இறை நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கை ஒரு போதும் வெற்றியைத் தருவதில்லை. தேர் ஓட இரண்டு சக்கரம் தேவை. அது போல, மனிதனின் வளர்ச்சிக்கு தெய்வ பலமும், முயற்சியும் வேண்டும்.  நம்பிக்கையோடு பயணிப்போம். உயர்வோம். பலரை உயர்த்துவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!