
போக்குவரத்து கடனைத் தீர்க்க, பொதுமக்களிடம்தான் பணம் வாங்க வேண்டுமா? என்றும், வேறு வழிகளில் சரிசெய்ய, அறிவார்ந்த அமைச்சர்கள் இல்லையா? என்றும் சசிகலா புஷ்பா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னைக்கு வருவதற்காக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் டெல்லி விமான நிலையத்தில் காதிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிவாவின் கன்னத்தில் சசிகலா புஷ்பா அடித்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து அறிந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, சசிகலா புஷ்பாவை போயஸ்கார்டனுக்கு அழைத்து, எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது, சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா அடித்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து, சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் அழுதுகொண்டே, புகார் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, சசிகலா புண்பா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, அதிமுகவை வழிநடத்துவேன் என்றும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் எதையும் சாதிக்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது அவர் தினகரன் அணியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சசிகலா புஷ்பா கூறும்போது, போக்குவரதது கடனை தீர்க்க பொதுமக்களிடம் பணம் வாங்க வேண்டுமா என்று கேட்டுள்ளார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில், சசிகலா புஷ்பா எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து கடனைத் தீர்க்க ஆட்சியாளர்கள் மக்களிடம் பணம் வாங்கித்தான் சரி செய்ய வேண்டுமா? வேறு வழிகளில் சரி செய்ய, ஆலோசனைக் கூற அறிவார்ந்த அமைச்சர்கள் இல்லையா?
ரூ.10. கோடி கடனை தீர்க்க மக்கள் படும் கஷ்டம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து பார்ப்பதுதான் அறிவார்ந்த அரசியல். தினகரன் அணியினர், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தடை ஏற்படுத்துவது அராஜக அரசியல். எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி இரட்டை இலை சின்னம் வைத்திருந்தால் மட்டும் தகுதி ஆகிவிடாது. எம்.ஜி.ஆர். விழாவுக்கு எதிர்கட்சி போன்று சுவர் விளம்பரம் செய்ய தடை ஏற்படுத்துவது, எதிரி அரசியல் பகை உணர்வாக உள்ளது. இதனை மக்களும், தொண்டர்களும் பார்த்துக் கொண்டு உள்ளனர். அனைவரும் தினகரன் பக்கம்தான் உள்ளனர். இவ்வாறு சசிகலா புஷ்பா எம்.பி. கூறினார்.