udhayanidhi: உதயநிதி துணை முதல்வராக வேண்டுமா..? அமைச்சராக வேண்டுமா..? கழகத்திற்குள் கலாட்டா..!

By Thiraviaraj RMFirst Published Dec 16, 2021, 11:23 AM IST
Highlights

துணை முதலமைச்சராக உதயநிதி வர வேண்டும் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், ஸ்டாலின் அதனை விரும்பவில்லை. 

பல ஆண்டுகளாகவே உதயநிதியின் அரசியல் வருகை பற்றி பல்வேறு தகவல்கள் உலா வந்தன. அவரது தந்தையைப்போல மேயராகி அடுத்து அமைச்சராகி, முதல்வர் ஆவார் என கட்டியங்கள் கூறின. ஆனால், சட்டசபைக்குள் நேரடியாக காலடி எடுத்து வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உதயநிதிக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மட்டுமின்றி, திமுக வட்டாரங்களிலும் எழுந்தது. திருவல்லிக்கேணியில் வெற்றி பெற்றபின் அவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற முழக்கம் திமுக வட்டாரங்களில் தொடங்கி இருக்கிறது. உதயநிதியின் பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் உயிர் நண்பருமான அன்பில் மகேஷ் “உதயநிதி , சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மட்டும் சொந்தம் கொண்டாடாமல் 234 தொகுதியிலும் சொந்தம் கொண்டாட வேண்டும். அவர் அமைச்சராக பொறுப்புக்கு வரவேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்களின் விருப்பம். அவரின் சேவை ஒரு தொகுதியோடு சுருங்கி விடக் கூடாது” என்று கூறினார்.


அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், ’’உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஆகையால் அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  பரிந்துரை கடிதம் எழுதினார். 

விரைவில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி வரும்  உதயநிதி அமைச்சராக வந்தால் நல்லது என நினைக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியும் ’’முதல்வர் மு.க.ஸ்டாலினைபோல், சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும். “முதலமைச்சர் போலவே உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார்; வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வர வேண்டும், அவரது பணி மாநிலம் முழுவதும் தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஒரு சந்தேகம் எழுந்தது. உதயநிதி துணை முதலமைச்சர் ஆக வேண்டும்  என்கிற கோஷம் என்னவாயிற்று? திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். ‘’துணை முதலமைச்சராக உதயநிதி வர வேண்டும் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், ஸ்டாலின் அதனை விரும்பவில்லை. சீனியர்கள் இருக்கும்போது உதயநிதியை துணை முதல்வராக்கினால் கட்சிக்குள் பிரச்னை வரும். பொதுவெளியில் கடும் விமர்சனங்கள் எழும். ஆகையால் இதை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது எனக்கூறி விட்டார். அதனை அடுத்துத்தான் அவரை அமைச்சராவது ஆக்குங்கள் என பலரும் ஸ்டாலினிடம் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பதே உண்மை’’ என்கின்றனர். 

click me!