
' தமிழகத்தில் நடந்து வரும் தொடர் கொலை, கொள்ளைகளுக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கவலையோடு தெரிவித்திருக்கிறார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் நடந்து வரும் செயின் பறிப்பு, கொலை சம்பவங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார் ஜி.கே.வாசன். இதுதொடர்பாக, தன்னுடைய முகநூல் பக்கத்தில் விரிவான கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். அதில், ' தமிழகத்தில் மாநகரம், நகரம், கிராமம் ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பைக் செயின் பறிப்பும் வங்கிகளில் கொள்ளை அடிப்பதும் வீடுகளில் புகுந்து கொலை, கொள்ளை செய்வதும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாத இறுதியில் சென்னை அடையாறில் உள்ள வங்கியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.6 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடைபெற்றது. அதேபோல, வீட்டுக்குள் புகுந்து கொலை செய்து பணத்தையும் நகைகளையும் கொள்ளை அடித்த சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை மன்னார்குடி அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் பணமும் நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.மேலும் நாமக்கல் மோகனூர் பகுதியில் 2 வீடுகளில் திருட்டு நடைபெற்றுள்ளது. சென்னையில் பைக் செயின் பறிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, வங்கியில் திருட்டு, பைக் செயின் பறிப்பு போன்றவைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு என்ன காரணம்? இதில் ஈடுபடுவோர் யார் யார், ஏதேனும் கூட்டம் இருக்கிறதா, சதி தீட்டப்படுகிறதா, இதற்கெல்லாம் யார் பொறுப்பு, தமிழகத்தைச் சேர்ந்த ரவுடிகளின் அட்டகாசமா, வெளி மாநிலத்தைச் சேர்ந்த குழுவா என்றெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமும், அவசியமும் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
காரணம் பல குற்றச்செயல்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றால் அது குறித்து விசாரணையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனையை காலம் தாழ்த்தாமல் கொடுக்கக்கூடிய நிலை ஏற்பட்டால்தான் மக்கள் நம்பிக்கையோடு நடமாட முடியும். இல்லையென்றால், பகலானாலும், இரவானாலும் பயத்தோடுதான் வெளியில் செல்ல நேரிடும்.
எனவே, இந்த பயத்தில் இருந்து மீளவும் பாதுகாப்பாக செல்வதற்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக 24 மணிநேர நடவடிக்கையில் முனைப்போடு செயல்பட வேண்டிய கட்டாயம் தமிழக காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக, தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொடர் கண்காணிப்புகள், ரோந்து பணிகள் போன்றவற்றை தீவிரப்படுத்தி மக்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு கொடுப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.