
உலக நாயகன் கமல் ஹாசன் இன்னும் 3 நாளில் ஒரு பகீர் தகவலை சொல்லப் போவதாகக் கூறியுள்ளார். அது ஆக்கிரமிப்பு குறித்தானது என்பதால் இப்போதே அதில் அரசியல் பார்வை அதிகமாகப் பதிந்து கிடக்கிறது.
சென்னை, அடையாறு பகுதியில் பசுமை வழிச் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார்.
பொதுவாக, இப்போது கமல்ஹாசன் டிவிட்டரில் ஏதாவது பதிவிட்டாலேயே அது ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, அது குறித்த விவாதம் அதிகம் நடைபெறுகிறது. இதனால், பலரும் கமல்ஹாசனிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி, அவர் அதற்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று கோருகின்றனர். அண்மையில் எண்ணூருக்குச் சென்று அங்குள்ள பிரச்னைகள் குறித்து பேசினார். அது ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக பதில் அளித்தார். இப்படி கமல்ஹாசனின் செயல்பாடுகள் சமூகத்தில் கவனம் பெறுவதால், அவரை பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.
இந்நிலையில், நாட்டின் முக்கிய ஜீவாதாரப் பிரச்னையான விவசாயிகளின் பிரச்னையையும் பொதுவெளியில் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று நோக்கில், இன்று விவசாயிகள் பிரச்னைகளை அலசும் கூட்டத்தில் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.
அப்போது பேசிய அவர், “மற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் அதை மறுக்கிறது. அரசியல்வாதிகள் என்பவர்கள் தனியாக இல்லை நம்மோடுதான் இருக்கிறார்கள். தலைவனை தேடக் கூடாது, நியமிக்க வேண்டும். ஜனநாயகத்தில், மக்கள்தான் எஜமானர்களாக இருக்கிறார்கள். வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட முடியாது. ஹைட்ரோ கார்பனை நாம் சாப்பிட முடியாது. சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது...” என்று ஆதரவுக் குரல் எழுப்பினார்.
மேலும், “நாம் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு இருந்து விட்டோம். இப்போது விழித்துக் கொள்ள வேண்டும். வேளாண் துறையை தொழில் துறையாக்கினால்தான் அனைவரும் வாழ முடியும்” என்று அழுத்தமாகக் கூறிய கமல், “பல ஆண்டுகளாக விவசாயிகளின் தொல்லைகளையும், பெருமைகளையும் கேட்டு வளர்ந்தவன். என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி செலுத்துவது போல்!” என்றார்.
இவை எல்லாவற்றையும் விட, ஆறு குளங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து அவர் கூறியவைதான் அதிகம் கவனம் பெற்றவை. அண்மையில் இந்து மக்களில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று கூறி, பலத்த எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார் கமல். இந்து மதம் என்பது, இயற்கையை வழிபடும் முறையைக் கொண்டது. இயற்கையே இறைவன் என்ற தன்மையைக் கொண்டதால்தான், இங்கே ஆறு, ஏரி, மரம் என இயற்கையை வழிபட்டனர். அந்த வகையில், தானும் இந்து மதக் கருத்துகளைக் கொண்டவன் தான் என்பதை வலியுறுத்தும் விதமாக, “மழைகளையும், ஆறுகளையும் சாமியாக கும்பிடுங்கள்.” என்று கூறினார்.
அந்த வகையில், இயற்கையை பராமரிக்கும் பணியில், அதாவது, குளங்கள், ஏரிகளை பராமரிப்பு செய்யும் பணியில் நிச்சயம் நாங்கள் உதவுவோம். கடந்த 50 ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம். புராண காலங்களில் பாலம் கட்ட அணில் உதவியது போல் விவசாயிகளுக்கு உதவிட நானும் ஒரு ஜந்துவாக இருப்பேன்..” என்று கூறினார்.
இதை எல்லாம் விட ஹைலைட்டான விஷயம், இன்னும் 3 நாட்களில் ஒரு பகீர் விஷயத்தை வெளிப்படுத்துவேன். ஒரு ஆற்றையே காணவில்லை. அதை சொல்கிறேன்.. பொறுத்திருங்கள் என்று கூறினார். எனவே, இன்னும் 3 நாட்கள் காத்திருந்தால் நிச்சயம் ஒரு பகீர் விஷயம் நமக்குத் தெரியவரும்தான்.