
‘இவன் வேற மாதிரி’ என்று நறுக்கென நிரூபித்துள்ளார் கமல். பொதுவாக அரசியலுக்கு வரும் சினிமா நட்சத்திரங்கள் தங்களது சினிமா கெத்தை காண்பித்துதான் இங்கே ஓட்டு பிடிப்பார்கள். ஆனால் அரசியலுக்குள் வர எத்தனிக்கும் கமல் அந்த பொதுப் புத்தியை உடைத்துத் தள்ளியிருக்கிறார்.
எப்படி?
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் இன்று நடந்த தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்...
“சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் உணவு இல்லாமல் இருக்க முடியாது. சினிமா என்பது அத்தியாவசியங்கள் மற்றும் அடிப்படைகளுக்கெல்லாம் பிறகு வரும் பொழுதுபோக்குதான்.
இந்த தேசத்தை ஜனநாயக தேசமென்கிறோம். அதில் மெய்யான கருத்து என்னவென்றால், மக்கள்தான் எஜமானர்கள். எப்போதும் அவர்களே எஜமானர்களாக இருந்திடல் அவசியம்.
இந்த கூட்டத்திற்கு நான் வந்ததன் பின்னால் அரசியலில்லை.
நான் ஓட்டு சேகரிப்பதற்காக இங்கே வரவில்லை. சோறு சேகரிக்க வந்துள்ளேன். புணாங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதாக சொல்வார்கள். அது போல் நான் உங்களுக்கு உதவும் எண்ணத்தோடு இங்கு வந்துள்ளேன். உண்டு உயிரோடிருந்தால்தானே அரசியலெல்லாம் செய்ய முடியும்! அந்த உணவை உற்பத்திக்கும் விவசாயியே முதன்மையானவன்.
சில உரிமைகளை போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. உங்களுக்காக போராடும் தலைவனை தேடாதீர்கள் நியமியுங்கள்.”
- என்று கமல் நிறுத்தியபோது அரங்கம் அதிர்ந்த சப்தம் வெளியே அடித்து விளையாடிக் கொண்டிருந்த மழையையே மெளனமாக்கியிருக்கிறது.