நாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்..? முன் அறிவிப்பின்றி மாற்றியதாக திமுக காட்டம்!

By Asianet TamilFirst Published Oct 14, 2019, 6:53 AM IST
Highlights

நாங்குநேரி தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன் அறிவிப்பின்றி மாற்றாப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து திமுகவின் அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தலைமை தேர்தல் ஆணையத்திலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
 

 நாங்குநேரி தொகுதியில் 30 வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன் அறிவிப்பின்றி மாற்றப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்துள்ளது. 
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21 அன்று நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24 அன்று எண்ணைப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 
 நாங்குநேரியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் நாங்குநேரி தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன் அறிவிப்பின்றி மாற்றாப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து திமுகவின் அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தலைமை தேர்தல் ஆணையத்திலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.


அந்தப் புகாரில், ‘அரசியல் கட்சிகளுக்கு முன் அறிவிப்பின்றி 30 வாக்குப்பதிவி இயந்திரங்கள் நாங்குநேரியில் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலின்போதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. தற்போது நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக முக்கிய எதிர்க்கட்சியான திமுக புகார் கூறியுள்ளது.

click me!