
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என்றும் அனைத்து தொண்டர்களும் எங்களிடமே உள்ளனர் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இன்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுக என்ற கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி அணி பயன்படுத்தலாம் என்றும் மதுசூதனன் அணி இவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீண்டும் விடுவிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற மாபெரும் இரண்டு தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, சின்னம், அவர்களுடைய எண்ணப்படியும், அவர்களின் மேலான ஆசியோடும் எங்களுக்கு கிடைத்ததுள்ளது என்றார்.
இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். அனைத்து தொண்டர்களும் இங்கேதான் (எடப்பாடி-பன்னீர்) உடன்தான் உள்ளனர் என்றும். இனிமேல் இதுபோன்ற கேள்விகளுக்கு இங்கு இடமில்லை என்றும் கூறினார். இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கே தங்களது பங்களிக்க வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறியுள்ளது. நாங்கள் அறுதி பெரும்பான்மையோடு உறுதியோடு இருக்கிறோம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.