
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்படும் என்பது எதிர்பார்த்தது தான் என்றும் அதிமுகவில் இனி அணிகள் கிடையாது என்றும் எம்.பி. மைத்ரேயன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இன்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுக என்ற கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி அணி பயன்படுத்தலாம் என்றும் மதுசூதனன் அணி இவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீண்டும் விடுவிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மைத்ரேயன் எம்பி கூறுகையில், அதிமுக என்றால் இனி அணி கிடையாது என்றும், அதிமுக இனி நாங்கள்தான் மட்டும்தான் என்று கூறியிருந்தார்.
எம்.பி. மைத்ரேயன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்படும் என்பது எதிர்பார்த்ததுதான் என்று கூறினார். எதிர்பார்த்த தீர்ப்பே வந்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்றும் அதிமுகவில் இனி அணிகள் கிடையாது என்றும் கூறினார்.