இதுதான் பேட்ட பாயுற நேரம்.. கொங்கு மண்டலத்தில் ‘கெத்து’ காட்டும் சசிகலா.. அதிமுக தலைமை அதிர்ச்சி !

By Raghupati RFirst Published Apr 13, 2022, 10:08 AM IST
Highlights

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாற்றம் வரும். ஆன்மிக பயணம் என்ற முறையில் சென்றால் கூட, அரசியல் நிர்வாகிகள் என்னுடன் வருகிறார்கள். எனவே அரசியல் பயணத்தையும் அப்படியே தொடங்க போகிறேன். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது.

எடப்பாடி எடுத்த ஆக்சன் :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவியிலிருந்து அதிமுகவின் மூத்த தலைவர்களான ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் நீக்கம் செய்தனர்.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் என்ற பதவிகள் நீக்கப்பட்டு ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றனர். இதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக பொதுச் செயலாளர் இல்லாமலேயே பொதுக் குழு கூட்டப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். 

சசிகலா தரப்பு :

மேலும் சசிகலா தொடர்ந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சசிகலாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை அதிமுக மூத்த தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று சசிகலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலா சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப் பயணமாக காரில் வந்தார். நேற்று முன்தினம் காலையில் நாமக்கல் வந்த சசிகலா, அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக சேலம் வந்தார்.

சசிகலா பேட்டி :

சேலம் ராஜகணபதி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த அவர் சேலம் மாமாங்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று 2வது நாளாக மாமாங்கத்தில் இருந்து காரில் தாரமங்கலம் சென்றார். பின்னர் பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொங்கு மண்டல மக்கள் மிகவும் மென்மையானவர்கள்.

அரசியல் பயணம் தொடங்கியது :

அன்பாகவும், பாசமாகவும் பழகுகின்றனர். ஒருவர் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கிற முடிவு. தனிப்பட்ட ஒருவர் அதனை கூற முடியாது. தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ, அவர்களை அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது’ என்று கூறினார். சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சசிகலா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி கொடுத்தார்.

அப்போது, ‘நான் சென்ற இடங்களில் எல்லாம் தொண்டர்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாற்றம் வரும். ஆன்மிக பயணம் என்ற முறையில் சென்றால் கூட, அரசியல் நிர்வாகிகள் என்னுடன் வருகிறார்கள். எனவே அரசியல் பயணத்தையும் அப்படியே தொடங்க போகிறேன். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் சசிகலாவுக்கு கொடுக்கும் வரவேற்பு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

click me!