
சென்னை தலைமை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கார் நினைத்து உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவை கூட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய நிலையில், மே மாதம் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வரும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாள்தோறும் துறைச் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறைச் சார்ந்த கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அத்துடன், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
தலைமைச்செயலகத்தில் பரபரப்பு
இந்நிலையில், கூட்டம் முடிந்ததும், அமைச்சர்கள், உறுப்பினர்களை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் அவர்களின் கார்கள் தயாராக நின்றன. வழக்கமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கார், 4வது கேட் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும். நேற்று கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி 4வது கேட் வழியாக வெளியே வந்தார். அப்போது, அங்கு கூடி இருந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபடி நடந்து வந்தனர்.
உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி
ஆனால், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது, தன்னுடைய கார் என நினைத்து அங்கு நின்றிருந்த உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். அதன் பிறகு அவருடைய பாதுகாவலர்கள் அறிவுறுத்தலுக்கு பிறகு சாரி என கூறிவிட்டு தனது காரை நோக்கி சென்றார்.