
டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர். தினகரனின் இந்த வெற்றியை அடுத்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்தே சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தினகரன், அதிமுக வேட்பாளரைவிட 50 சதவிகித வாக்குகள் முன்னிலையிலேயே இருந்து வந்தார். இறுதி சுற்றின் முடிவில் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆர்.கே.நகர் தினகரன் போட்டியிடுவதற்கு அவரது குடும்பத்தாரே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தினகரன் சாதனை வெற்றி பெற்றார். இதனால், சசிகலா குடும்பத்தினர் இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தய நாள் அன்று, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், மறைந்த ஜெயலலிதா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால், தினகரன் மீது சசிகலா குடும்பத்தினர் சிலர் வருத்தத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி விவேக்கை போனில் சசிகலா தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலா, நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்றும் தினகரனுக்கு வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது என்றும் விவேக்கிடம் கூறியுள்ளார். மேலும் நாளை நல்ல ரிசல்ட் வரும் என்று அம்மா தொகுதி வேறு யார் கையிலும் போய்விடக் கூடாது என்றும் சசிகலா கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, தினகரன் வெற்றி பெற்றிதை விவேக்கிடம் செல்போனில் தொடர்பு கொண்ட சசிகலா வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார். அதற்கு விவேக், இப்போதுதான் வாழ்த்துக்களை சொன்னதாக கூறினாராம். அது மட்டுமல்லாது சசிகலாவின் வாழ்த்துக்களை தினகரனுக்கு விவேக் தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க தினகரன் திட்டமிட்டுள்ளராம். 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சசிகலாவை பார்க்க சிறைத்துறை அனுமதி அளித்து வரும் நிலையில், தற்போது சிறப்பு அனுமதி பெற்று சசிகலாவை பார்க்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.