நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்… விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வேண்டுகோள்!!

By Narendran SFirst Published Nov 27, 2021, 3:11 PM IST
Highlights

கட்டாய மதமாற்ற தடை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

கட்டாய மதமாற்ற தடை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ அலோக் குமார், கிறிஸ்தவ மிஷனரிகளும் இஸ்லாமிய மௌல்விகளாலும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது அண்மை காலத்தில்ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதிச் செயலில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பாரத தேசத்தின் பல மாநிலங்களில் கட்டாய மதமாற்றம் தற்போது அதிகரித்துள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க 11 மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. இந்த தடை சட்டம் பாரத தேசம் முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கட்டாய மதமாற்ற தடை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரவும் விசுவ இந்து பரிசத் வலியுறுத்துகிறது. தமிழகத்தில் மதமாற்றம்  கட்டாயத்தின் பெயரிலும், பண முதலீடுகள் மூலமாகவும், மிரட்டியும், மற்றும் போலி வாக்குறுதிகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. மதமாற்றம் சமுதாயத்தில் இருக்கும் நல்லிணக்கத்தை குறைக்கின்றது. மதமாற்றத் தடைச்சட்டம் தமிழ்நாட்டிலுள்ள தேச விரோதிகளை தோலுரித்துக் காட்டும், மற்றும் தேச விரோதமான காரியங்கள் முற்றிலும் அழிக்கப்படும். விசுவ ஹிந்து பரிஷத் தமிழக அரசை கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக செய்து வங்கிகளில் வைத்து வட்டி வாங்கி கோயில்களுக்கு செலவு செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

இம்முயற்சியை கைவிட வேண்டுகோள் விடுக்கின்றது. பக்தர்கள் கோயிலுக்கு அளித்த நன்கொடை அவர்களின் மத நம்பிக்கையை சார்ந்தது, இது காலம் காலமாக நடந்து வரும் சம்பிரதாயம், இதில் அரசு தலையிடுவதற்கு ஒருபோதும் உரிமை இல்லை. ஹிந்து ஆலயங்கள் மற்றும் திருமடங்கள் விஷயத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டிய நேரம் இது. ஆலயங்கள் மடங்கள் குறித்து வெளிப்படையான கட்டமைப்பு தேவை. ஆலயங்களில் அர்ச்சகர்கள் நியமனம் ஆலய வருமானம் மட்டுமின்றி ஆன்மீக பணிகளுக்கு பங்களிக்கும் பக்தர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மாநில அரசுகள் ஒருபோதும் ஆலயங்கள் மீது உரிமை கொண்டாடக்கூடாது, ஆலய விவகாரங்களில் குறைந்தபட்ச தலையீடு மட்டுமே அரசுக்கு இருக்க சட்டத்தின் வழியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இது பற்றிய வரையறையில் ஆலயங்களில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. ஆகவே இந்து ஆலயங்களின் திருமடங்களையும்  ஹிந்து சமுதாயத்திடம் ஒப்படைக்க மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை வைக்கிறது. கோவில்களில் யார் பூசாரியாக இருக்க வேண்டும் என்பது தொடங்கி சம்பிரதாய பூஜைகள் வரை உறுதிப்படுத்த வேண்டும்.

விசுவ ஹிந்து பரிஷத் ஹிந்து கோயில்களை அரசு கையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு நாடு தழுவிய முயற்சி மேற்கொள்ளவிருக்கிறது. இதன் பொருட்டு, மத்தியக் குழு பல்வேறு இந்து மதத் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகளை சந்தித்து இந்துக் கோயில்கள் இந்து சமுதாயமே நடத்திடும்படி முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்த வழிகாட்டுதல் தேடும் முயற்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய அமைப்புக் குழு, நாடு முழுவதும் பயணம் செய்து இதற்கான ஒருமுக அமைப்பை ஏற்படுத்த தீர்மானித்துள்ளது என்று தெரிவித்தார். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது விசுவ  ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ அலோக் குமார், மற்றும் மத்திய இணை பொது செயலாளர் ஸ்ரீ ஸ்தாணுமாலயன், மற்றும் தென் பாரத அமைப்பாளர்  ஸ்ரீ பிஎம்.நாகராஜன், மாநில தலைவர் ஸ்ரீ குழைக்காதர், மாநில செயலாளர் ஸ்ரீ லட்சுமண நாராயணன், மாவட்ட செயலாளர் கே சசிகுமார், மாவட்ட தலைவர் எஸ் முருகேசன் உடன் இருந்தனர். 

click me!