நானும் மதுரக்காரன் தான்டா! திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் விஷால்...

By sathish kFirst Published Aug 18, 2018, 8:44 AM IST
Highlights

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயன்று முடியாமல் போனதால் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டே தீர்வது என்கிற முடிவில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் அமோக வெற்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் அசத்தல் வெற்றி என வெற்றி மேல் வெற்றியை குவித்த விஷால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது தான் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் தனது ஆதரவாளர்களுடன் பைக்கில் வந்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
   
ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த ஒருவரிடம் கையெழுத்து பெறாமலேயே பெற்றதாக விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறி அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷால் எவ்வளவோ போராடியும் அவரது வேட்பு மனுவை ஏற்க முடியாது என்று தேர்தல் அதிகாரி கூறிவிட்டார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட முடியாத நிலை உருவானது. ஆனால் தான் எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிடுவது உறுதி என்று அப்போதே விஷால் கூறியிருந்தார்.


   
இந்த நிலையில் தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ் மறைவால் திருப்பரங்குன்றத்திலும் கலைஞர் மறைவால் திருவாரூர் தொகுதியிலும் இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுடன் தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவது என்று விஷால் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
   
அதிலும் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு வெற்றி உறுதி என்று விஷால் சென்டிமென்டாக கருதுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மதுரையை கதைக்களமாக வைத்து விஷால் நடித்த திமிறு, சண்டக்கோழி, பாண்டியநாடு ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்த வகையில் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் தனக்கு வெற்றியை தேடித்தரும் என்று அவர் நம்புகிறார்.


  
எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் விஷால் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை வேட்பு மனுவில் எந்த பிரச்சனையும் வராமல் போட்டியிட்டே தீர்வது என்று அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சண்டக்கோழி 2 படத்தின் சூட்டிங்கிற்காக விஷால் மதுரை சென்றால். அங்கு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
 

click me!