அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு 23 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கூட்டம் வருகின்ற 23-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு, தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு, உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் பின்னர் அது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. மேலும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.