
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ‘விஷால், அண்ணன் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.’ என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் நேற்றும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கும் விஷால் “எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்களே சாட்சி. என் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் என் மக்கள் பணி தொடரும். கூடிய விரைவில் என் அடுத்தகட்ட அரசியல் முயற்சியை அறிவிப்பேன்.
நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரவுகிறது. நான் யாரையும் இதுவரையில் ஆதரிப்பதாக சொல்லவில்லை.” என்று சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், விஷால் இப்படி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுவிட்டாலும் உள்ளுக்குள் அவர் வேறு ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
அதாவது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக, காழ்ப்புணர்ச்சியோடு தனது வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் அ.தி.மு.க. இருப்பதாகவே நினைக்கும் விஷால், மிக சைலண்டாக ஆர்.கே.நகர் தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக களமிறங்க இருக்கிறார் என்கிறார்கள். அதாவது ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் மதுசூதனனுக்கு விழாமல் திருப்பி விடுவதே விஷாலின் உள்ளடி வேலையாக இருக்கும் என்கிறார்கள்.
நேரடியாக எதையும் செய்யாமல், திரைத்துறையில் தனக்கு உதவியாக இருப்பவர்கள், வேட்பு மனு தாக்கலின் போது தன்னுடன் வந்த நண்பர்கள் மூலமாக வார்டு வாரியாக ஸ்கெட்ச் போட்டு, தெலுங்கு பேசும் வாக்காளர்களின் லிஸ்டை எடுத்து, சமுதாய ரீதியாக அவர்களை அணுகி அவர்களின் வாக்குகளை அ.தி.மு.க. பக்கம் போகாமல் செய்யும் பணியை தெளிவாக செய்யப்போகிறார் அவர் என்கிறார்கள். இதற்கான அடிப்படை மற்றும் ஆரம்ப கட்ட பணிகள் தயாராம்.
தினகரனுக்கு ஓட்டு போட்டாலும் பரவாயில்ல, தி.மு.க.வை நீங்க ஆதரிச்சாலும் பரவாயில்ல ஆனா அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்க! என்பது மட்டுமெ விஷாலின் ஒரு வரி தீர்மானமாக இருக்கிறதாம்.
உருப்படுமா இந்த உத்தி?