அதிரடி மன்னன் வீரேந்திர ஷேவாக்கை தேர்தலில் நிறுத்த முயன்று டக் அவுட் ஆன பா.ஜ.க.

By Muthurama LingamFirst Published Mar 15, 2019, 1:29 PM IST
Highlights

அதிரடி கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கை பா.ஜ.க.வில் சேர்த்து எம்.பி. தேர்தலில் போட்டியிடவைக்க எடுத்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்துள்ளன. அந்த முயற்சியில் பா.ஜ.க. முதல் பந்திலேயே ‘டக் அவுட்’ ஆகியுள்ளது.

அதிரடி கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கை பா.ஜ.க.வில் சேர்த்து எம்.பி. தேர்தலில் போட்டியிடவைக்க எடுத்த முயற்சிகள் படுதோல்வியில் முடிந்துள்ளன. அந்த முயற்சியில் பா.ஜ.க. முதல் பந்திலேயே ‘டக் அவுட்’ ஆகியுள்ளது.

2015 ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வீரேந்திர ஷேவாக் இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் வலம் வந்தவர் . இவரது அதிரடி ஆட்டத்துக்கு இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது என்பது ஒருபுறமிருக்க பல நாட்டு கிரிக்கெட் வீரர்களே இவரது ரசிகர்கள்தான் என்பது குறி[ப்பிடத்தக்கது. இவரை பாஜக சார்பில் வேட்பாளராக நியமிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே செய்திகள் வெளியானது. குறிப்பாக, பிப்ரவரி 3ஆம் தேதி ஹரியானாவில் நடந்த பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஹரியானாவின் ரோஹ்தர் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபெந்தர் சிங் ஹூடாவைத் தோற்கடிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கை போட்டியிட வைக்க ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் சேவாக் அப்போதே ட்விட்டரில், “சில விஷயங்கள் எப்போதும் மாறாது, இந்த வதந்திகள் போல. 2014இல் பரவிய வதந்திகளைப் போலவே இப்போதும் பரவுகிறது. இதில் புதுமை இல்லை. அப்போதும் ஆர்வம் இல்லை. இப்போதும் ஆர்வம் இல்லை” என்று கூறியிருந்தார். ஆனாலும் அதன்பிறகும் சேவாக்கை பாஜகவில் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. மேற்கு டெல்லியில் அவரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வந்தன. 

பாஜகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சேவாக்கை, கிரிக்கெட் பிரபலம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி எளிதில் வெற்றி பெறச் செய்து விடலாம் என பாஜக நிர்வாகிகள் தரப்பில் கணக்கு போடப்பட்டது. ஆனால் சேவாக் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக பாஜக வட்டாரத்திலிருந்தே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”பாஜக சார்பில் போட்டியிட சேவாக் மறுத்துவிட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அரசியலில் ஈடுபடுவதிலோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதிலோ அவருக்கு ஆர்வம் இல்லை” என்றார்.

ஷேவாக் கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி சில சமூக செயல்பாடுகளிலும் சத்தமில்லாமல் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் வாழ்நாள் கல்விச்செலவை அவர் ஏற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!