பாமக வன்முறை போராட்டம்... பொருங்களத்தூரில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

By Ezhilarasan BabuFirst Published Dec 1, 2020, 10:45 AM IST
Highlights

அதில் ஜிஎஸ்டி சாலை முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று நடைபெற்றுவரும் போராட்டத்தின் எதிரோலியாக  பெருங்களத்தூரில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

தமிழக அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  பாமக சமீப காலமாக தீவரமாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அக் கோரிக்கையை வலியுறுத்தி, பாமக சார்பில் இன்று தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் சென்னைக்கு திரண்டு வந்தனர். இதனை அறிந்த போலீசார், அவர்களை பெருங்களத்தூர் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தினர். அதில் சில முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

திரண்டு வந்திருந்த ஏராளமான தொண்டர்கள் சென்னைக்குள் வரும் பட்சத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் தயவுசெய்து திரும்பி செல்லும்படி போலீசார் பாமக தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதை ஏற்க மறுத்தும், தங்களை சென்னைக்குள் அனுமதிக்காததை கண்டித்தும் பாமக கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். அதேபோல சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரயில்களை  மரித்தும், ரயில்கள் மீது கல் வீசி தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பெருங்களத்தூர் மற்றும் சென்னையின் பல்வேறு ரயில் நிலையங்களில் பதட்டம் ஏற்பட்டது. பாமகவினரின் இத்திடீர் போராட்டத்தின் காரணமாக பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

அதில் ஜிஎஸ்டி சாலை முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்களுடன் உடன்பாடு ஏற்படாததால், ஜிஎஸ்டி சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், இதை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர். 

 

click me!