பல நாள் பகை.. தேர்தல் மூலம் சி.வி.சண்முகத்தை பழி தீர்த்துக்கொண்ட லட்சுமணன்..!

By vinoth kumarFirst Published May 3, 2021, 6:35 PM IST
Highlights

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் சி.வி.சண்முகத்தை திமுக வேட்பாளர் லட்சுமணன் 14,877 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழியை தீர்த்துக்கொண்டார். 

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சா் சி.வி.சண்முகத்தை திமுக வேட்பாளர் லட்சுமணன் 14,877 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழியை தீர்த்துக்கொண்டார். 

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறக்கப்பட்டார். திமுக தரப்பில் அதிமுகவில் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்த மருத்துவர் ஆர்.லட்சுமணன் போட்டியிட்டார். அதேபோல், அமமுக வேட்பாளராக சி.வி.சண்முகத்தின் நெருங்கிய விசுவாசி மற்றும் தனிப்பட்ட உதவியாளராக இருந்த ஆர்.பாலசுந்தர் உள்பட 25 போ் போட்டியிட்டனர். 

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. முதல் சுற்றில் திமுக வேட்பாளா் லட்சுமணனும், 2, 3-வது சுற்றுகளில் அமைச்சா் சண்முகமும் முன்னிலை பெற்றார். இதையடுத்து, 4-வது சுற்றிலிருந்து பெரும்பாலான சுற்றுகளில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை பெற்றார். தொடர்ந்து பின்தங்கிய அமைச்சர் சண்முகம், 24-வது சுற்று முடிவின்படி, 76,860 வாக்குகள் பெற்றிருந்தார். அதேநேரத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணன் 90,083 வாக்குகள் பெற்றிருந்தார்.  தொடா்ந்து, 27-வது சுற்றின்போது, அமைச்சர் சண்முகம், லட்சுமணனைவிட 14,352 வாக்குகள் பின்தங்கியிருந்தார்.

இறுதியில், தபால் வாக்குகள் உள்பட லட்சுமணன் 1,01,755 வாக்குகளும், அமைச்சர் சண்முகம் 86,878 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, 14,877 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஜெயலலிதா இருந்த போது கட்சியிலிருந்து சி.வி.சண்முகம் ஓரம் கட்டப்பட்டபோது விழுப்புரம் மாவட்ட செயலாளராக டாக்டர் லட்சுமணன் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர்,  சசிகலாவால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து லட்சுமணன் அதிரடியாக நீக்கப்பட்டார்.  பின்னர், ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த பின் லட்சுமணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஏழாம் பொறுத்தம். 

ஆகையால், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலிலும் லட்சுமணன் சீட் கேட்டார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி, லட்சுமணனுக்கு சீட் கொடுக்க விடாமல் செய்துவிட்டார். இதனையடுத்து, சி.வி.சண்முகம் மீது ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!