மத்திய அரசிடமிருந்து ரூபாய் 1732. 5 கோடி முன் பணம் பெற்றிருக்கிறோம்.. சீரம் நிறுவனத்தின் CEO தகவல்.

By Ezhilarasan BabuFirst Published May 3, 2021, 6:10 PM IST
Highlights

இரண்டாவதாக நான் கூறுவது என்னவென்றால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு அனைத்து வகையான ஒத்துழைப்பும், ஆதரவும் அரசிடமிருந்து கிடைத்துள்ளது.

மத்திய அரசு மருந்து நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசிக்காக இதுவரை எந்த ஆர்டரும் கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய நிலவரப்படி 26 கோடி டோஸ் மருந்து பொறுவதற்காக சுமார் 1732.5 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து முன்பணம் பெற்றுள்ளதாக சீரம் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது சரியான தகவல்களை பொது மக்களிடம் கொண்டு  சேர்ப்பது அவசியம் எனவும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். தடுப்பூசியால் மட்டுமே மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் போதிய அளவில் கிடைக்கவில்லை. மத்திய அரசு மருந்து நிறுவனங்களிடம் போதிய தடுப்பூசிகளுக்கான ஆர்டர்கள் எதையும் கொடுக்கவில்லை அதுவே தட்டுபாட்டிற்கு காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியாகின. மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதுடன், மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் இது ஒரு அவதூறு பிரச்சாரம் எற மறுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்ட் 100 மில்லியன் டோஸ் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், அதேபோல பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் டோஸ் கோவேக்சின் பெற ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. 

அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இந்த  பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் அரசு குற்றம்சாட்டியுள்ளது. அதாவது மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு தேவையான 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வாங்க ஏப்ரல் 28ஆம் தேதி சீரம் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதற்காக 1,732.5 கோடி பணம் முன் தொகையாக வழங்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அதார் பூனவல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

தடுப்பூசிகள் தொடர்பாக நான் தெரிவித்த சில கருத்துக்கள் தவறாக புரிந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதால் சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  முதலாவதாக தடுப்பூசி உற்பத்தி என்பது அதிக கவனத்துடன் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டிய ஒன்று, எனவே ஒரே இரவில் அதன் உற்பத்தியை அதிகரிக்க முடியாது. இந்தியாவின் மக்கள்தொகை மிகப்பெரியது என்பதாலும் எல்லா முதியவர்களுக்கும் போதுமான அளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதும் எளிதான காரியம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் முன்னேறிய  நாடுகளில் உள்ள நிறுவனங்களும், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறிய மக்கள்தொகை கொண்டிருக்கிற நாடுகள் கூட மருந்து உற்பத்தி செய்ய போராடுகின்றன. இரண்டாவதாக நான் கூறுவது என்னவென்றால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்திய அரசாங்கத்துடன் நாங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு அனைத்து வகையான ஒத்துழைப்பும், ஆதரவும் அரசிடமிருந்து கிடைத்துள்ளது. அது அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் நிதி தொடர்பானதாக இருக்கலாம்.

ஆக இன்றைய நிலவரப்படி சுமார் 26 கோடிக்கும் மேல் கோவிஷீல்ட் உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்களை நாங்கள் அரசிடமிருந்து பெற்றுள்ளோம். ஏற்கனவே 50 கோடிக்கும் அதிகமான டோஸ்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம், இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் 11 கோடி கோவிஷீல்ட் டோஸ் வழங்குவதற்கான முன்பணம் சுமார் 1732.5 கோடி எங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதேபோல அடுத்த சில மாதங்களில், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கான இரண்டாவது தவணை உற்பத்தியை வழங்க இருக்கிறோம். இறுதியாக நான் கூறுவது என்னவென்றால், தடுப்பூசி விரைவாக சரியான நேரத்தில் கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம், அந்த இலக்கை அடைய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம், இந்த covid-19 க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நாங்கள் இன்னும் கடுமையாக  உழைப்போம் என கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!