திருமாவளவனுக்கு விழுப்புரம் மட்டும் தான்! கறார் காட்டும் தி.மு.க!

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 9:42 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி மட்டும் தான் ஒதுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் தொகுதி மட்டும் தான் ஒதுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தி.மு.க சுறுசுறுப்பு காட்டி வருகிறார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொடங்கி விடுதலைச் சிறுத்தைகள் வரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை கூட தி.மு.க இறுதி செய்துவிட்டது. இந்த தொகுதிப் பங்கீடு பணிகள் முடிவடைந்த பிறகு தான் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலையே தி.மு.க வெளியிட்டது. 

இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே தி.மு.க ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இறுதி நேரத்தில் தி.மு.க விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை கழட்டிவிட்டது. இதனால் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். இதன் பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கருணாநிதி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளை ஒதுக்கினார்.

 

இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் தோல்வியை தழுவினார். கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் முதலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே தி.மு.க ஒதுக்கியது. சிதம்பரத்தை தவிர வேறு தொகுதியை தர முடியாது என்று தி.மு.க கறார் காட்டியது. ஆனால் வட மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் தி.மு.கவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். இதனால் கலைஞர் நேரடியாக திருமாவளவனை அழைத்து பேசினார். 

அப்போதே திருமாவளவன் விழுப்புரம் தொகுதியை கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். ஆனால் பொன்முடி எதிர்ப்பு காரணமாக விழுப்புரம் தொகுதியை ஒதுக்காமல் திருவள்ளூர் தொகுதியை தி.மு.க விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கியது. இப்படி கடந்த காலங்களில் தி.மு.க கூட்டணியில் இரண்டு தொகுதிகளை பெறவே விடுதலைச்சிறுத்தைகள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. 

இந்த நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என்றும் அதுவும் விழுப்புரம் என்றும் தி.மு.க முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் தோற்றதால் விழுப்புரம் தொகுதியை திருமாவளவன் விரும்பி கேட்டதாக கூறப்படுகிறது. திருமாவளவன் கேட்டதன் அடிப்படையில் விழுப்புரத்தை விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கிய தி.மு.க அத்தோடு அந்த கட்சியுடன் தொகுதிப்பங்கீடை முடிக்கவும் முடிவு செய்துள்ளது.

click me!