தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல்… அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன் !!

By Selvanayagam PFirst Published Oct 30, 2018, 9:25 AM IST
Highlights

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல்  தொடங்கப்படும் என தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன்  அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றபிறகு பல அடுக்கடுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட்  கிளாஸ் ரூம்ஸ், ஆங்கில வழிக்கல்வி, எல்கேஜி, யூகேஜி  வகுப்புகள் என அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு ஜொலித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.

தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்..

click me!