திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டி! பிரேமலதா விஜயகாந்தின் அடுத்த மூவ்

By vinoth kumarFirst Published Oct 30, 2018, 9:25 AM IST
Highlights

இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள பிரேமலதா விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள பிரேமலதா விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தே.மு.தி.கவின் பொருளாளராக பதவி ஏற்றது முதலே இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பிரேமலதா விஜயகாந்த் தீவிரம் காட்டி வருகிறார். 

தினசரி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, நிர்வாகிகள் நியமனம், பிரச்சனைகளுக்கு தீர்வு என்று சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் பிரேமலதா. கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று தான் கடந்த வாரம் வரை பிரேமலதா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜனவரிக்கு முன்னதாக திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதே போல் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு இல்லை என்று தினகரன் அறிவித்தார். 

இதன் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றத்துடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்கப்படுகிறது. இந்த 20 தொகுதிகளிலும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றால் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை தங்களை தேடி வரும் என்பது தான் பிரேமலதாவின் தற்போதைய கணக்கு. 

எனவே 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வை தற்போதே பிரேமலதா தொடங்கியுள்ளார். இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சோளிங்கர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க வசம் இருந்தவை. மேலும் திருப்பரங்குன்றம் விஜயகாந்த் பிறந்த மதுரை மாவட்டத்திற்கு உட்பட்டது. மேலும் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் அதி தீவிர பக்தர். கடந்த 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் இருப்பதாக கூட பேசப்பட்டது.  

அந்த வகையில் திருப்பரங்குன்றத்தில் தாமே போட்டியிட்டால் என்ன என்று நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசித்து வருகிறார். பெரும்பாலானவர்கள் பிரேமலதாவே இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மற்றவர்களும் ஆர்வத்துடன் போட்டியிட முன்வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு தே.மு.தி.கவின் பலத்தை காட்டுவது என்று பிரேமலதா உறுதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளவர்களையும் பிரேமலதாவே தனிப்பட்ட முறையில் அழைத்து பேசி வருகிறாராம்.

click me!