விஜயின் ஞானத்தந்தை... யார் இந்த பிரிட்டோ ? இத்தனை கோடிக்கு அதிபதியானது எப்படி..?

By Thiraviaraj RMFirst Published Dec 22, 2021, 10:39 AM IST
Highlights

பிரிட்டோ ஆரம்பத்தில் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இந்த பிரிட்டோ ஒன்றும் சாதாரண பணக்காரர் அல்ல. 

​ஷியோமி போன்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் காரணத்தால் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஷியோமி போன் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருவதால் இந்த ரெய்டு அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாநாடு பட விழாவில் காமராஜருக்கு அடுத்து நல்ல முதல்வர்கள் இல்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த நாளே பிரிட்டோவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. இரண்டுக்கும் முடிச்சுப்போட என்ன காரணம் என்கிறீர்களா? இந்த பிரிட்டோ விஜயின் சொந்தக்காரர். 

கடந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிரிட்டோ நடத்துகிற கல்வி நிலையத்தில் பள்ளி கூடமே திறக்காத நிலையில் L.K.G மாணவ மாணவியினர்களின்  பெற்றோர்களிடம் சிறப்பு  கட்டணமாக 67,000 ரூபாய் மற்றும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாக மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு  நாலாபுறத்தில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.  

செந்தூரப்பாண்டியில் இருந்து மாஸ்டர் வரைக்கும் தொட்டுத் தொடருகிறது விஜய் - சேவியர் பிரிட்டோ உறவு. பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோடு அவ்வப்போது முரண்பட்டு வந்த நடிகர் விஜய், அண்மையில் தந்தையை ஒதுக்கியே வைத்துவிட்டார். ஆனால், விஜயின் ஞானப் பெற்றோராக மத ரீதியாக வரித்துக்கொண்ட பிரிட்டோவுடன் இன்னமும் உறவிலும், நட்பிலுமாக இருக்கிறார். பிரிட்டோவை, ‘அங்கிள்’ என்றே அழைப்பார் விஜய். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினர், எஸ்.ஏ.சியின் தங்கையின் கணவர்தான் இந்த பிரிட்டோ.

பொதுவாக ஞானத்தந்தை அந்தஸ்துக்கு உறவினர்களில் நல்ல நிலையில் இருப்பவரைதான் பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் எஸ்.ஏ.சியும் தன் மகன் விஜய்க்கான ஞானத்தந்தையாக பிரிட்டோவைத் தேர்ந்தெடுத்தார். 1990களிலேயே விஜய்யின் செந்தூரப்பாண்டி, ரசிகன் படங்களைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ ஒரு பரபரப்பான பிசினஸ் காந்தம். 1984 முதல் இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இன்னமும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருப்பவர்.

எந்த அளவு பிசினஸ் காந்தம் என்றால் இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் விமான சரக்கு நிலையம் அமைக்கும் அளவுக்கு பெரும் தனக்காரர் பிரிட்டோ. சென்னை விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து நெரிசலால், பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஹைதராபாத், பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் லாஜிஸ்டிக் நிறுவனம் நடத்திக்கொண்டிருந்த சேவியர் பிரிட்டோ இந்த சூழலைப் பயன்படுத்தி சென்னையிலேயே தனியார் விமான சரக்கு நிலையத்தைத் தொடங்கினார். தற்போது வரை பல்லாயிரகணக்கான கோடிகளில் புரள்கிறார் சேவியர் பிரிட்டோ.

பிரிட்டோ ஆரம்பத்தில் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இந்த பிரிட்டோ ஒன்றும் சாதாரண பணக்காரர் அல்ல. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கெரி இண்டேவ் என்கிற சர்வதேச அளவில் கப்பல் மற்றும் சரக்கு முனையங்களையும், ஈ.சி.ஆர் ரோட்டில் 85 தனி சொகுசு வில்லாக்களை கொண்ட எஸ்தல் ஓட்டல் நிறுவனத்தில் இயக்குநர். அவர் ஸியோமியின் ஏற்றுமதி இறக்குமதி லாஜிஸ்டிக்ஸ் சேவையை காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். இந்தியா முழுவதும் ஜியோமி சம்பந்தப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி, பொருட்கள் உற்பத்தி செய்யும் இடங்களில் வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி ஜியோமி லாஜிஸ்டிக் சேவை செய்து வரும் பிரிட்டோ நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது. 
 

click me!