
’கேப்டனே எங்கள் மூச்சு, அண்ணி பிரேமலதாவே எங்கள் பேச்சு, தே.மு.தி.க.வே எங்கள் வாழ்வு’ என்று விஜயகாந்தின் காலடியே சரணமென்று கிடந்து, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல பதவிகளை அவரால் அடைந்து செழித்து வலம் வந்தவர்கள் வி.சி.சந்திரகுமார், சேகர், பார்த்திபன் ஆகியோர். கடந்த பொது தேர்தலில் விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காத காரணத்தினால் அக்கட்சியை பிளந்து, ‘மக்கள் தே.மு.தி.க.’ எனும் கட்சியை ஆரம்பித்து, பின் தி.மு.க.வோடு அதை இணைத்ததோடு அக்கட்சியில் மாநில பதவிகளை பெற்று வலம் வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆங்கில செய்திதாளுக்கு பேட்டி கொடுத்த விஜயகாந்த் ‘நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகளை விட்டுக்கொடுத்து, எங்களுக்கு ஆட்சியிலும் பங்கு கொடுக்க சம்மதித்திருந்தால் ஸ்டாலின் இந்நேரம் முதல்வராகி இருப்பார். இனி அவரால் அந்த பதவியை அடையவே முடியாது.’ என்று திருவாய் மலர்ந்தார்.
இது தி.மு.க.வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைவிட, ”தன் மண்டபத்தை தி.மு.க. ஆட்சி இடிச்சதாலேதான் கட்சி ஆரம்பிச்சார் விஜயகாந்த். வருஷக்கணக்கா மேடைக்கு மேடை கருணாநிதியை வெளுத்தெடுத்தார். மக்களுடனும், இறைவனுடனும்தான் கூட்டணின்னார். அப்பேர்ப்பட்டவர் இன்னைக்கு இப்படி சொல்றாருன்னா அன்னைக்கு இவர் பேசுனது அத்தனையும் பொய்யிதான். கேவலமான அரசியல் இது.” என்று பொதுமக்களே வெளுத்தெடுக்க துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று தி.மு.க.வில் ஐக்கியமாகியிருக்கும், பழைய தே.மு.தி.க. முக்கியஸ்தர்களான அந்த மூன்று பேரும் என்ன சொல்கிறார்கள்? என்றால்...
“தி.மு.க. கூட்டணியை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க.விடமிருந்து பல கோடிகளை வாங்கிக் கொண்டு தே.மு.தி.க.வை அடமானம் வைத்தவர் விஜயகாந்த். இவரெல்லாம் ஸ்டாலினைப் பற்றி பேசலாமா? தன் கட்சியை தரிசு நிலமாக்கி, பொட்டல்காடாக மாற்றிய பெருமையுடைய விஜயகாந்த், தொண்டர்களின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் ஏன் எங்கள் தளபதி பற்றி பேசுகிறார்?” என்று போட்டுப் பொளந்துள்ளார்.
சேகரோ “தளபதியை என்ன ஆவார்ன்னு இவரு ஆரூடம் சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும். முதல்ல இவரு என்ன ஆனார்? அதை சொல்லட்டுமே! இவருக்கு திராணின்னு ஒண்ணு இருக்குதா? அவர் கட்சி தொண்டர்களே அவரை சுத்தமா வெறுத்து ஒதுக்கிட்டாங்க. ஏதாச்சும் வாய்க்கு வந்ததை பேட்டிக் கொடுத்து, வாழ்க்கையை ஓட்டலாமுன்னு நினைச்சுட்டு பேசிட்டு திரியுறார்.” என்று ஒருகாலத்தில் ‘திராணியாரே!’ என்று பாராட்டிய மனிதரை பிரித்து மேய்ந்திருக்கிறார்.
இறுதியாக வி.சி.சந்திரகுமாரோ “முன்னுக்கு பின் முரண் தான் விஜயகாந்த். சென்னை ராயப்பேட்டையில் நடந்த மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பேசுறப்ப ‘சுட்டுப் போட்டாலும் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டேன்.’ அப்படின்னு பேசினார். அப்பேர்ப்பட்டவர் இன்னைக்கு ‘எங்களை அணுசரித்திருந்தால் ஸ்டாலின் முதல்வராகியிருப்பார்’ அப்படின்னு சொல்றது எவ்வளவு பெரிய முரண். அப்போ வெளியில ஒண்ணு பேசிக்கிட்டு, உள்ளுக்குள்ளே வேற டீலிங் நடத்தினாரா?
கருணாநிதியை உடல் நலம் விசாரிக்காமல் இருப்பதற்கு அவரது கட்சிக்குள்ளேயே விமர்சனம் எழுந்திருக்குது. இதை சமாளிப்பதற்காக, ‘நான் அனுமதி கேட்டேன். ஸ்டாலின் விடவில்லை’ அப்படின்னு பொய்யா சொல்றார்.” என்று வெளுத்திருக்கிறார்.
இருக்குற இடத்துக்கு ஏதுவா மோளம் அடிக்குறதுதானே அரசியல்!
இருந்தாலும் இந்த விஷயத்துல விஜயகாந்த் இவ்வளவு அசிங்கப்பட்டிருக்க கூடாது.