முதலில் கேப்டன் தான்..! பிறகு தான் நம் கூட்டணி..! வீடு தேடிச் சென்ற உதயநிதி ஸ்டாலின்..! காரணம் என்ன?

By Selva KathirFirst Published May 5, 2021, 10:53 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று முதன்முறையாக எம்எல்ஏ ஆகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் முதல் நபராக கேப்டனை தேடிச் சென்று வாழ்த்து பெற்று இருக்கிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று முதன்முறையாக எம்எல்ஏ ஆகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் முதல் நபராக கேப்டனை தேடிச் சென்று வாழ்த்து பெற்று இருக்கிறார்.

கடந்த 2ந் தேதி திமுக வெற்றி என்கிற அறிவிப்பு வெளியானது. அன்றைய தினம் கலைஞர் நினைவிடம், அண்ணா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார் உதயநிதி. மறுநாள் தனது வெற்றிக்கு காரணமானவர்களை நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார் அவர். பிறகு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியை சிஐடி காலணி இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார் உதயநிதி. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை திடீரென சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு உதயநிதி வருகை தந்தார். தேர்தல் வெற்றிக்கு கேப்டனிடம் ஆசி பெற வந்துள்ளதாக உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் உதயநிதி நேரில் சென்று சந்தித்தார். இதே போன்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனையும் தேடிச் சென்று வாழ்த்து பெற்றார் உதயநிதி. பிறகு பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியவர் கி.வீரமணியையும் சந்திக்க மறக்கவில்லை.

இப்படி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் மட்டும் அல்ல திமுகவின் முன்னோடிகள் அன்பழகன், ஆர்காடு வீராசாமி ஆகியோரின் வீடுகளுக்கும் நேரில் சென்றார் உதயநிதி. ஆனால் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்ன என்றால், திமுக கூட்டணியில் இருந்த தலைவர்கள், திமுகவின் முன்னோடிகளை எல்லாம் பின்னால் வைத்துவிட்டு எதிர்கட்சி வரிசையில் இருந்த கேப்டனை தேடிச் சென்று உதயநிதி சந்தித்தது தான் மிகப்பெரிய ஹைலைட். இத்தனைக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் பிரேமலதாவும் சரி விஜயபிரபாகரனும் சரி ஸ்டாலினை மட்டும் அல்ல உதயநிதியையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து தள்ளினர்.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் கேப்டனை வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார் உதயநிதி. இது முழுக்க முழுக்க கேப்டன் மீது உதயநிதி வைத்திருக்கும் மரியாதை தான் என்கிறார்கள். தற்போது வேண்டுமானாலும் தேமுதிக இப்படி தேய்ந்து போன கட்சியாக இருக்கலாம். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு வரை தேமுதிக முழுக்க முழுக்க விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது விஜயகாந்தின் நடவடிக்கைகளை பார்த்து உதயநிதி வியந்ததாக சொல்கிறார்கள். கலைஞர், ஜெயலலிதாவிற்கு எதிராக ஒற்றை ஆளாக விஜயகாந்த் செய்த அரசியல் உதயநிதியை மிகவும் கவர்ந்ததாக சொல்கிறார்கள்.

தவிர அரசியலுக்கு வரும் முன்பு உதயநிதி சினிமாத்துறையில் இருந்தவர். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவரும் விஜயகாந்தை பற்றி மிகவும் பாசிடிவாக பேசுவதை உதயநிதி கவனித்து வந்ததாக கூறுகிறார்கள். இப்படி ஒரு நல்ல மனிதரிடம் சென்று முதலில் ஆசி பெறுவது தான் சரியாக இருக்கும் என்று கருதியே கேப்டன் வீட்டிற்கு உதயநிதி முதன்முதலில் சென்றதாக சொல்கிறார்கள். அதோடு கலைஞர் மறைவின் போது அமெரிக்காவில் இருந்த கேப்டன், துக்கம் தாளாமல் அழுதபடியே வெளியிட்ட வீடியோவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு கலைஞர் மீது தனிப்பாசம் கொண்டவர் கேப்டன். இதனை எல்லாம் உதயநிதி மறக்காமல் கேப்டனை தேடிச் சென்றுள்ளார்.

click me!