
கொரோனா சிகிச்சைக்குரிய ஆக்சிஜனுக்கும் ,மருந்துகளுக்கும், தடுப்பூசிகளுக்கும் ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாட்டை நீக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம்:
நாடு முழுவதிலும் கொரோனா சிகிச்சைக்குரிய மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும்,தடுப்பூசிகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்குத் தேவைப் படுகின்ற நிதியை உடனடியாக வழங்கவேண்டும். ரெம்டிசிவிர் உள்ளிட்ட மருந்துகளும், ஆக்சிஜனும் சமூக விரோத சக்திகளால் பதுக்கப் படுகின்றன. விலைகளும் மிக அதிகமாக உயர்ந்துள்ளன. ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளில் போலி மற்றும் கலப்பட மருந்துகளும் புழக்கத்தில் அதிகமாக உள்ளன. இவற்றை தடுத்திட உடனடி நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். ரெம்டிசிவிர் மருந்தை அரசே தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக வழங்கிட வேண்டும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கிட ,செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோ டெக் (HLL Biotech)நிறுவனம் மூலம் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும்.
18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் பதினெட்டு வயதுக்கு. அனைவருக்கும் 2 தவணைகள் செலுத்துவதற்கு சுமார் 12.5 கோடி தவணைக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் தேவை. இது வரை 4 மாதமாக வெறும் 60 லட்சம் தவணைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 45 லட்சம் பேர் இரண்டாவது தவணைக்காக தடுப்பூசி இன்றி காத்திருக்கின்றனர். கோவிஷீல்டு, கோவேக்சின், போன்ற தடுப்பூசிகளை அந்நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ 300 மற்றும் ரூ 400 என்ற விலைகளை கொடுத்து 8 கோடி தவணைகள் வாங்கிடவே, சுமார் 2400 கோடி ரூபாய் முதல் 3200 கோடி ரூபாய் வரை செலவாகலாம். உடனடியாக நமக்கு அவ்வளவு தவணைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எனவே , கோவேக்சின் தடுப்பூசியை தமிழக அரசே சென்னை கிண்டியில் உள்ள ‘கிங்ஸ் நிறுவனம்’ மூலமும், செங்கல்பட்டிலுள்ள எச்எல்எல் பயோ டெக் நிறுவனம் மூலமும் உற்பத்தி செய்வதே நல்லது. அதன் மூலம் குறைந்த விலையில் ,தேவையான மருந்தை குறுகிய காலத்திற்குள் உற்பத்தி செய்திட முடியும்.
தற்போழுது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கொரோனா மிக வேகமாகப் பரவுகிறது. தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சத்தை தொட்டுவிட்டது. 23 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதைத் தடுப்பதற்கு கூடுதல் கட்டுப் பாடுகளை நடைமுறைப் படுத்துவது மிகவும் அவசியம். அனைவரின் வாழ்வாதாரத் தேவைகளையும் நிறைவு செய்தலுடன் கூடிய பொதுமுடக்கம் கொரோனா பரவலின் வேகத்தை மட்டுப்படுத்த உதவும். எனவே, குறைந்த பட்சம் 14 நாட்களுக்காவது பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.கொரானா நிவாரண நிதியாக ரூபாய் 4000 த்தை உடனடியாக அனைத்து குடும்ப அட்டைதாரரர்களுக்கும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.