
சமூக வளைதளங்களில் இன்று வைரலாகும் விஜயகாந்தின் அந்த போட்டோ ‘வாவ்! கேப்டன் இஸ் பேக்!’ என்று வாய்பிளக்க வைத்திருக்கிறது நெட்டிசன்களை. ஆம்! செம கெத் அண்டு ஃப்ரெஷ்ஷாக விஜயகாந்தின் கரெண்ட் போட்டோக்கள் அப்லோடாகியிருக்கின்றன.
சமீப வருடங்களாக சமூக வலைதளங்களில் கேப்டனின் போட்டோக்கள் அவரை கழுவிக் கழுவி ஊற்றுவதற்கும், மற்றவர்களை நக்கலடித்து மீம்ஸ் போடுவதற்குமே பயன்பட்டு வந்தன. கேப்டன் அண்ட்கோ இது பற்றி சென்னை சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தும் எந்த பயனுமில்லை.
கேப்டனை வைத்து கலாட்டா செய்பவர்கள் மேலும் மேலும் குதூகலிக்கும்படித்தான் அவரது பொது மேடை செயல்பாடுகளும் இருந்துவந்தன. கட்சி மேடைகளில் திடீரென அழுவது, சிரிப்பது, கண்டபடி திட்டுவது அல்லது கன்னத்தை கிள்ளி புன்னகைப்பது என்று அவரும் குரளி வித்தை காட்டி வந்தார். இதையெல்லாம் பிரேமலதா உடனிருந்து கண்காணித்தும், கட்டுப்படுத்தியும் வந்தார்.
விஜயகாந்தின் இந்த விநோத சரிவினால் தே.மு.தி.க.வின் அரசியல் வாழ்க்கை அவ்வளவேதான் என்று அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறி வந்தனர். சமீபத்தில் அக்கட்சி தனது பிறந்தநாளை கொண்டாடியபோது கூட ‘சமகாலத்தில் ஒரு கழகம் விழுந்து சரிந்த கதை’ என்றுதான் நாமும் தலைப்பு வைத்து விவரித்தோம்.
கேப்டனையும், கழகத்தையும் விமர்சனங்கள் போட்டுப் பொளப்பது குறித்து அவரது கட்சி நிர்வாகிகள் பெரியளவில் மன வேதனையை வெளியிட்டனர். ஆனால் பிரேமலதா மட்டும் ‘இது மாறும். இந்நிலை மாறும்.’ என்று நம்பிக்கை காட்டினார்.
எது மாறும்? எப்படி மாறும்? என்று நிர்வாகிகள் புரியாமல் ஏங்கியிருந்த நிலையில்தான் இதோ விஜயகாந்தின் பளீர் ப்ரெஷ் புகைப்படங்கள் இன்று வாட்ஸ் ஆப் களில் வைரலாகின்றன.
கோயம்பேடிலுள்ள கழக தலைமை அலுவலகத்தில், தனது பிரத்யேக அறையில் விஜயகாந்த் இருக்கும் படங்கள் தெறிக்க விடுகின்றன. வெள்ளை சர்ட், வெள்ளை பேண்ட் அதே ஷேடில் கேன்வாஸ், சற்றே ட்ரிம்மான உடல் வாகு என்று புது லுக் கொடுக்கிறார் கேப்டன். சமீப காலமாக அவரது முகத்திலிருந்த இனம்புரியாத ரியாக்ஷன் மிஸ்ஸாகி இருப்பது சிறப்பு.
ஒரு போட்டோவில் செல்ஃபி எடுக்கிறார், மற்றொரு போட்டோவில் இடுப்பில் ஒரு கரத்தை வைத்து, சற்றே கெத்தாக ‘நான் வந்துட்டேன்னு சொல்லு! பழைய கேப்டனா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பது போல் ரியாக்ஷன் காட்டுகிறார்.
ஆக்சுவலாக இந்த போட்டோ இன்றுதான் அப்லோடப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் மிக மிக சமீபத்தில்தான் எடுக்கப்பட்டது என்பதும் கேப்டன் முன்பு போலில்லை, ரொம்பவே மாறிட்டார் என்பதும் புலனாகிறது.
கேப்டனின் இந்த பர்ஷனல் மாற்றம், அவரது கட்சியை எந்தளவுக்கு முன்னேற்றும் என்பது புரியவில்லை. காரணம், அக்கட்சியிலிருந்த மிக முக்கிய நிர்வாகிகள் பலர் இப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியில் ஐக்கியமாகிவிட்டனர்.
விஜயகாந்த் எனும் தனி மனிதனுக்கு ஒரு காலத்தில் கூடிய கூட்டம் இப்போது மீண்டும் கூடுமா என்பதும் சந்தேகமே. காரணம், ‘மாற்று அரசியல் செய்யும் மந்திரம் என்னிடமிருக்கிறது.’ என்று சொல்லி மூடிய கைகளை காட்டி புதிர் போட்டு வந்தார் கேப்டன். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அவரது கரங்களை விரிய திறந்து அதனுள் புதிதாக ஏதுமில்லை என்பதை புரிந்து கொண்டிருக்கிறது தமிழகம். எனவே மறு எழுச்சி எந்தளவுக்கு சாத்தியமென்பது விளங்கவில்லை.
ஆனாலும் நம்பிக்கையோடு ஃப்ரெஷ் முகம் காட்டி போஸ்கொடுக்கிறார் கேப்டன்.
நம்பிக்கைதானே எல்லாம்! விஜயகாந்த் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?!