தேமுதிக மாநாட்டில் பேச விஜயகாந்த் தீவிரம்... பேச்சு பயிற்சி எடுப்பதாக தகவல்!

By Asianet TamilFirst Published Sep 12, 2019, 10:18 PM IST
Highlights

விஜயகாந்த் மீண்டும் தீவிர அரசியல் களத்துக்கு வருவதைத்தான் அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவரை நீண்ட நாட்கள் கழித்து பொதுவெளியில் பார்க்க அக்கட்சி தொண்டர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள். 

திருப்பூரில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் பேச அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தீவிர பயிற்சி எடுத்துவருகிறார்.
தேமுதிகவின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூரில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 15 அன்று இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தேமுதிக தொடக்க விழாவில், விஜயகாந்த் சிங்கம் போல் தொண்டர்கள் மத்தியில் கர்ஜிப்பார். மேலும் கட்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தது. இதனால், கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்திலும் இருந்து வந்தனர்.


தனித்து போட்டியிட்டு வந்தவரை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்த தேமுதிக, கூட்டணி அரசியலில் இறங்கிய பிறகு இறங்கு முகத்தைச் சந்திக்கத் தொடங்கியது. 2016-க்குப் பிறகு விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு மேலும் கட்சிக்கு பின்னடைவை உருவாக்கியது. ஓட்டு சதவீதம் தேமுதிகவுக்கு அதளபாதாளத்தில் சென்றுவிட்ட நிலையில், அக்கட்சியைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் அக்கட்சியின் பொருளார் பிரேமலதா விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் தீவிர முயற்சி ஈடுபட்டுள்ளார்கள்.


அதேவேளையில் விஜயகாந்த் மீண்டும் தீவிர அரசியல் களத்துக்கு வருவதைத்தான் அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவரை நீண்ட நாட்கள் கழித்து பொதுவெளியில் பார்க்க அக்கட்சி தொண்டர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநாட்டில் 10 நிமிடங்களாவது பேச வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயகாந்த் இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்காக அவர் தினமும் பயிற்சி எடுத்துவருவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
கடைசியாக கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி அழுதுகொண்டு காணொலியில் பேசியதையும், தேர்தல் நேரத்தில் வட சென்னையில் மேற்கொண்ட பிரசாரத்தில் ஓரிறு வார்த்தைகள் பேசியதுதான் விஜயகாந்த் பொதுவெளியில் பேசியவை. அதன்பிறகு திருப்பூர் மாநாட்டில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்காக அவர் பேச்சு பயிற்சி எடுத்துவருவதாக வெளியாகி உள்ள தகவல் தேமுதிகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!