விஜயகாந்த் வெளியிட்ட ஒற்றை அறிக்கை... குழம்பிபோன கட்சிகள்!

By Asianet TamilFirst Published Aug 2, 2019, 7:24 AM IST
Highlights

 ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்ற அடிப்படையில் ஒரே தீர்ப்பாயம் என்பதை நோக்கி பாஜக செல்கிறது. ஆனால், தீர்ப்பாய மசோதாவை  நதி நீர் இணைப்புக்காக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜயகாந்த்.

நாட்டில் உள்ள ஒன்பது நதி நீர் தீர்ப்பாயங்களை கலைத்துவிட்டு ஒற்றைத் தீர்ப்பாய மசோதாவை கொண்டு வந்துள்ளதை, நதி நீர் இணைப்புக்காக மசோதாவை கொண்டுவந்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்று வந்த பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்துவருகிறார். அவ்வப்போது அரசியல் சார்ந்த அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஜயகாந்த் நேற்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையைப் பார்த்த அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஜர்க் ஆகிவிட்டார்கள். ஆமாம், அந்த அறிக்கை தவறாக உள்ளதாக சர்ச்சையாகி இருக்கிறது. விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை இதுதான்:
“இந்தியா முழுவதும் நதிநீர் இணைப்புக்காக நாடாளுமன்றத்தில் ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு மட்டுமே. இந்தியா மிகச்சிறந்த ஒரு விவசாயநாடு, இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களும் விவசாயத்தை நம்பிதான் உள்ளன. இன்றைக்கு நீர் என்பது மிகமிக அத்தியாவசியமான ஒன்றாக அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீருக்கும், விவசாயத்திற்கும், தொழிலுக்கும் அனைத்து தேவைகளுக்கும் தீர்வுகண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீரில் தன்னிறைவு பெறவேண்டும். அதற்கு ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற மசோதா வரவேற்கத்தக்கது. 
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்று விட்டுவிடாமல், இந்தியாவில் உள்ள நதிகளை ஒன்றாக இணைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் தங்குதடையில்லாமல் கிடைக்க செய்ய வேண்டும். மேலும் மிக முக்கியமாக தமிழ்நாட்டிற்கு காவேரி, கோதாவரி இணைப்பு உடனடியாக செயல்படுத்தி, காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்றடைய இந்த நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இன்றைக்கு பல பகுதிகளில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படக்கூடிய சிரமமான சூழ்நிலையை நாம் பார்க்க முடிகிறது.


எனவே இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து, மழைநீரை சேமித்து வைத்தாலே தமிழகம் செழிக்கும். அதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கக்கூடிய அளவு நதிகளை இணைத்து, அதன் மூலம் ஆறுகள், ஏரி, குளம், குட்டை எல்லாவற்றிலும் நீர் நிலைகளை உயர்த்துவதற்கு நதிநீர் இணைப்பு மிக அவசியம். நதிநீர் இணைப்புக்காக ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை தேமுதிக சார்பாக வரவேற்கிறேன்.” என்று  அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.


விஜயகாந்த் அறிக்கையில் கூறியதுபோல நதிநீர் இணைப்புக்காக ஒற்றைத் தீர்ப்பாய மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவில்லை. காவிரி, கிருஷ்ணா என நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தண்ணீர் தாவா பிரச்னைகளைத் தீர்க்க 9 தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. தீர்ப்பாயங்கள் அமைத்தும் தண்ணீர் தாவா பிரச்னை தீரவில்லை. இன்னும் தண்ணீர் பிரச்னை நீடித்துவருகிறது. எனவே நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒன்பது தீர்ப்பாயங்களையும் கலைத்துவிட்டு, ஒரே தீர்ப்பாயத்தை அமைக்க பாஜக முடிவு செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்ற அடிப்படையில் ஒரே தீர்ப்பாயம் என்பதை நோக்கி பாஜக செல்கிறது. ஆனால், தீர்ப்பாய மசோதாவை  நதி நீர் இணைப்புக்காக நிறைவேற்றப்பட்டுள்ளதாக வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜயகாந்த்.

click me!