வேலூரில் காணாமல் போன மோடி, ராகுல்... தேசியக் கட்சிகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத கழகங்கள்!

By Asianet TamilFirst Published Aug 2, 2019, 6:56 AM IST
Highlights

பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து தமிழகத்தில் திமுக தலைவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால்தான் வலிமையான பாரதம் அமையும்; நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று அதிமுக தலைவர்களும் பிரசாரம் செய்தனர். 

வேலூரில் நாளையோடு தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுகவின் அணுகுமுறையைக் கண்டு தேசியக் கட்சிகள் வாயடைத்து நிற்கின்றன.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் தேசியக் கட்சிகளுக்கு வேலையே இல்லை என்ற நிலை உள்ளது. காங்கிரஸோ, பாஜகவோ எந்தக் கட்சியாக இருந்தாலும் திமுக அல்லது அதிமுகவோடு இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலைதான் உள்ளது. நடந்த முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பிடித்திருந்தன. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் ரேஸில் இருந்த தலைவர்களை முன்னிருத்தியும் இரு கட்சிகள் பிரசாரம் செய்தன.


இந்தியாவிலேயே காங்கிரஸ் கூட்டணியில் இருந்த எந்தக் கட்சியும் செய்யாத ஒன்றை திமுக செய்தது. பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்து தமிழகத்தில் திமுக தலைவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால்தான் வலிமையான பாரதம் அமையும்; நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று அதிமுக தலைவர்களும் பிரசாரம் செய்தனர். மோடியையும் ராகுலையும் முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்தார்கள். ஆனால், வேலூர் தேர்தலில் இது எல்லாமே  தலைகீழ்.

 
தேர்தல் பிரசாரத்தில் மறந்தும்கூட திமுக, அதிமுக தலைவர்கள் மோடி, ராகுல் பெயரை உச்சரிக்கவே இல்லை. நடப்பது எம்.பி. தேர்தலாக இருந்தாலும், வழக்கம்போல் திமுக, அதிமுகவின் குழாயடி பிரசாரமாகவே வேலூரில் இருந்துவருகின்றன. மோடி அரசையும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் விமர்சித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார். திமுக எம்.பி.க்களும் கூட்டண் கட்சிகளின் எம்.பி.களும் நாடாளுமன்றத்தில் என்ன செய்துவருகிறார்கள் என்பதை மையமாக வைத்தே மு,க. ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார்.

 
வேலூரில் பாஜகவை பிரசாரத்துக்குக்கூட அழைக்கவில்லை. திமுகவையும் அதன் குடும்ப அரசியலையும் விமர்சித்து பிரசாரம் செய்யும் அதிமுக, திமுக எம்.பி.களால் எந்த பிரயோஜனமும் இல்லை; ஏ.சி. சண்முகம் வெற்றி பெற்றால் தொகுதிக்கு நல்லது நடக்கும் என்றும் பிரசாரம் செய்துவருகிறார்கள். தேசியக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை என்ற முடிவுக்கு திராவிட கட்சிகள் வந்துவிட்டனவா என்று தேசியக் கட்சிகளின் தொண்டர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்.

click me!