
பட்ஜெட்டில் நிறை , குறைகள் உள்ளன என்று விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது குறித்த அவரது முழு அறிக்கை:
தமிழ்நாட்டு விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை தந்துள்ளது. மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில், வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றத்தை தருகிறது.
ஆறு, ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர் வாருவது, மேம்படுத்துவது, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் புதிதாக உருவாக்குவது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், அதற்கு நிதி ஒதுக்குவதும் இதுவரை ஏட்டளவிலேயே உள்ளது.
இதுவரை அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வராததால் மக்கள் பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே, இனியாவது இவற்றை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.
விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு உற்பத்தி செய்யும் தானியங்களை பாதுகாக்கவும், பதப்படுத்தவும் போதுமான சேமிப்பு கிடங்குகள் இல்லை. குளிர்பதன வசதிகள் கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைப்பது குறித்து அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை என்பதும் ஏமாற்றத்தை தருகிறது.
கடும் இன்னல்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருட்களுக்கு, உரிய விலை வழங்குவது, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பயிர் காப்பீட்டு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்கள் வறட்சி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வறட்சியை போக்கவும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவும், நதிநீர் இணைப்புத்திட்டம் குறித்த அறிவிப்பு ஏதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
ரயில்வே அறிவிப்பை பொறுத்தவரை கட்டண குறைப்பு இடம்பெறவில்லை. மேலும், தமிழகத்திற்கு புதிய ரயில்களோ, புதிய வழித்தடங்களோ அறிவிக்கப்படவில்லை. இது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
சாலை மேம்பாடு மற்றும் ரெயில்வே துறையில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை விவசாயத் துறைக்கும், ரயில்வே துறைக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற மக்களின் எதிர்ப்பார்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கடுமையான தாக்கத்தை எதிர்கொண்டுள்ள மக்கள், பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தனர். அதன் அடிப்படையில் சுங்கக்கட்டணம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ், சிலிண்டர் விலை மானியம் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
அனைத்து மக்களுக்கு பணப்பரிமாற்றத்தை எளிமையாக்கும் வகையில் கிராமங்கள்தோறும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படும் என்ற எதிர்பாப்பு பூர்த்தி செய்யப்படவில்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள், ஸ்மார்ட் நகரங்கள் போன்றவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படவில்லை. ஒரு கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் நாட்டில் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளோ, வேலை வாய்ப்பு திட்டங்களோ பட்ஜெட்டில் இடம்பெறாதது இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
மேலும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், அந்த குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும், நெசவும் இரண்டு கண்களாக திகழ்பவை. நெசவு தொழிலுக்கான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது.
பட்ஜெட் அறிவிப்புகளும், அறிவிக்கப்பட்ட திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாவே உள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் ரொக்கத்தொகையில் மாற்றம் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
கட்சிகளுக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம் என்கிற முறை மாற்றப்பட்டு, 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது கருப்புபண ஒழிப்பு நடவடிக்கைக்கு பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோன்று, வருமான வரியை பொறுத்தவரை ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கான வருமான வரியை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளதும் வரவேற்கத்தக்கது.
குறிப்பாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளும் மிகவும் வரவேற்கத்தக்கது.