வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் ஓய்வில் இருப்பதால், அக்கட்சியில் பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதிஷ், விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் ஊட்டியில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேமுதிக தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், விஜயகாந்த் ரசிகர் மன்றம் 40 ஆண்டு காலமாக உள்ளது. தற்போது நடைபெற உள்ள தேர்தல் களத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லை. தற்போது களத்தில் உள்ள முதல்வர் வேட்பாளர்கள் முதன் முறையாகத் தேர்தலைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு அனுபவம் உள்ளது என்றாலும், இந்தத் தேர்தல் என்பது முதல் தேர்தலைப் போன்றதுதான்.
தேமுதிக ஏற்கனவே தேர்தலைச் சந்தித்துள்ளது. அதனால், எங்களுக்கு அந்த அனுபவம் உள்ளது. தேமுதிக எதிர் நீச்சல் போட்டு சென்றுக்கொண்டிருக்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது அணி அமையவும் வாய்ப்பு உள்ளது. அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பது குறித்து விஜயகாந்த்தான் முடிவு எடுப்பார். எது எப்படி இருந்தாலும் இந்த முறை பல இடங்களில் தேமுதிக வெற்றியை பெறும்.” என்று விஜய பிரபாகரன் தெரிவித்தார்.