வரம்பு மீறி வார்த்தைகள் போகுது.. உங்க மகனை வாயை அடக்கச் சொல்லுங்க..! பிரேமலதா மீது பாய்ந்த பெரிய கட்சிகள்..!

By Vishnu PriyaFirst Published Feb 25, 2019, 12:21 PM IST
Highlights

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டையும் ரொம்பவே சூடேற்றி இருக்கிறது. இதில், விஜயகாந்தை பார்க்க வந்தபோது ஸ்டாலின் அரசியல் பேசினார் என்று பிரேமலதா உடைத்துவிட்டிருப்பதால் ஏக டென்ஷனில் இருக்கிறது தி.மு.க. இந்த நிலையில் விஜயபிரபாகாரனின் விவேகமற்ற பேச்சும் இணைந்து கொள்ள சமீபத்தில் பிரேமலதாவுடன் இரு தரப்புமே பாய்ந்தார்களாம்.

’திராணியார்’ என்று விஜயகாந்தை கொண்டாடியது தே.மு.தி.க. காரணம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கும் எதிராக எந்த தயக்கமும், அச்சமும் இன்றி சகட்டுமேனிக்கு சவால் விட்டும், இடித்துப் பேசியும் அதகளம் செய்ததால். மாயை மாஸ் படங்களுக்கு கைதட்டி வளர்ந்த கூட்டம் யதார்த்த அரசியல் மேடைகளில் இப்படி நாக்கைத் துருத்தும் தலைவனை கண்டபோது உணர்ச்சிப் பெருக்கில் ரசிக்க துவங்கியது. 

இந்த ரசிப்பை வாக்குகளாகவும், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களாகவும் அறுவடை செய்தார் விஜயகாந்த். ஜீரோவில் துவங்கிய கட்சி வெகு குறுகிய காலத்தில் பத்துப் பனிரெண்டு படிகள் மேலேறி நின்று ஆச்சரியப்படுத்தியது அரசியலை. ஆனால் அது நீண்டகாலம் தாக்குப் பிடிக்கவில்லை. விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்னையால் அவரது கட்சி செல்வாக்கும் கடுமையாக சரிந்து கிடக்கிறது. கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் தன் வாக்கு சதவீதத்தை மிக மோசமாக இழந்து, பிலோ ஆவரேஜ் லைனையும் தாண்டி நிற்கிறது. 

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தும் கூட சீராகாத உடல் நிலையுடன் விஜயகாந்த் வீட்டில் அமர்ந்திருக்க, பொருளாளர் எனும் பதவியுடன் பிரேமலதா மிக முழுமையாக கட்சி லகானை கையில் எடுத்து, சாட்டையை சுழற்ற துவங்கியுள்ளார். ஆனாலும் எழுச்சி கிட்டாத நிலையில்தான், புதிய திட்டம் ஒன்றுக்கு தயாரானார்கள். அதன் படி விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார் அரசியலில். 

கடந்த சில வாரங்களாக பல பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் பிரபாகரன். தொடர் தோல்வியால் சோர்ந்து கிடக்கும் கட்சி தொண்டர்களை உசுப்பி எடுக்க வேண்டுமென்றால், தன் அப்பாவை போல் அமளி துமளியாக பேசினால்தான் எடுபடும்! என்று அவருக்கு சிலர் தூபம் போட்டு, ரூட் கொடுத்திருக்கிறார்கள். இதை மேடையிலேயே ஒத்துக்கொள்ளும் பிரபாகரன் ‘எனக்கு சில பேர் டைரக்ட் பண்றாங்க. நான் கொஞ்சம் கொஞ்சமாதான் வருவேன், நா ஒண்ணும் ரோபோட் இல்லை.’ என்று சமீபத்தில் விருகம்பாக்கம் கூட்டத்தில் ஒத்துக் கொண்டிருக்கிறார். 

ஆனாலும் அப்பாவின் ஸ்டைலை பிடித்தே ஆக வேண்டும் எனும் நோக்கில் இரு பெரும் திராவிட கட்சிகளையும் சற்றே வாய்க்கு வந்தபடி பேச துவங்கியுள்ளார் பிரபாகரன். எங்கப்பா நூறு ஜெயலலிதாவுக்கு சமம்! ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்! கூட்டணி கேட்டு காலை பிடிக்கிறாங்க! நாங்க இருக்கிற கூட்டணியால் மட்டுமே ஜெயிக்க முடியும்! தூங்கி முழிச்சா, வீட்டு வாசல்ல கூட்டணிக்காக காத்திருக்கிற இவங்க கண்ணுலதான் முழிக்க வேண்டியிருக்குது!...என்று பிரபாகரன் போட்டு தாளித்துள்ளார். 

இந்த பேச்சு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டையும் ரொம்பவே சூடேற்றி இருக்கிறது. இதில், விஜயகாந்தை பார்க்க வந்தபோது ஸ்டாலின் அரசியல் பேசினார் என்று பிரேமலதா உடைத்துவிட்டிருப்பதால் ஏக டென்ஷனில் இருக்கிறது தி.மு.க. இந்த நிலையில் விஜயபிரபாகாரனின் விவேகமற்ற பேச்சும் இணைந்து கொள்ள சமீபத்தில் பிரேமலதாவுடன் இரு தரப்புமே பாய்ந்தார்களாம்... “எங்களை விமர்சிக்க விஜயகாந்துக்கு உரிமை இருக்குது, தகுதி இருக்குது. 

ஆனால் அரசியல்ல அ,ஆ கூட தெரியாத உங்க மகன் ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கார். இது எந்த வகையிலும் நல்லதில்லை. அவரை வாயடக்கமா பேசச் சொல்லுங்க. இந்த அத்துமீறல் தொடர்ந்தால் வீணாக அவமதிப்பு வழக்கும், வதந்தி கிளப்புதல்-ன்னு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். சின்ன பையன் சங்கடப்பட்டுட போறார் பாவம்.” என்றார்களாம். ஆனால் இது எதையும் காதில் ஏற்றிக் கொள்ளும் நிலையில் தே.மு.தி.க. இல்லையாம். அவர்களின் ஒரே எண்ணம் ‘இந்த தேர்தல் மூலம் மீண்டும் தங்களின் வாக்கு வங்கி பலத்தை நிரூபிப்போம்’ என்பதே. அதற்காக எவ்வளவும் இறங்கி அடிக்கத் தயாராம். சபாஷ்!

click me!