ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரைப்படத்துறையில் இணைந்து ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நாயகனாக விளங்கினார். ஏழை - எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கி சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஏழை - எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கி சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
கலைத்துறை மட்டுமின்றி அரசியல் மற்றும் பொதுவாழ்விலும் பல சாதனைகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். இதனாலேயே அவரது ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட அவரை கேப்டன் என்று அன்போடு அழைத்தனர். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து திரைப்படத்துறையில் இணைந்து ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நாயகனாக விளங்கினார். ஏழை - எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கி சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.
உள்ளொன்று புறமொன்று அல்லாமல் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசும் தன்மை கொண்ட பண்பாளர். தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தன்னலமற்ற தலைவராக உயர்ந்தார். தமிழக அரசியலில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி தேர்தல் வெற்றிகளை குவித்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெரும் அன்பை பெற்றவராக இருந்து வந்தார்.
அண்மை காலமாகவே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தி நம்மையெல்லாம். பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு அவரது கட்சி தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். அவர் இப்பூவுலகை விட்டு பிரிந்தாலும் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.