
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ஆனாலும் விஜயகாந்த் போல் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து முதல்வர் நாற்காலியை நெருங்கி, எதிர்கட்சி தலைவராகவே அமர்ந்த சமகால நடிகர்கள் யாருமே இல்லை.
கட்சி துவங்கியதும் ஒற்றை எம்.எல்.ஏ.வாக அதற்கடுத்த தேர்தலில் முதல்வர் யார் என்பதை நிர்ணயிக்கும் தலைவராக என்று அரசியலில் விஜயகாந்த் தொட்ட உயரங்கள் மிகப்பெரிய உச்சம்.
எந்த வேகத்தில் எழுந்தாரோ அதே வேகத்தில் சரிந்தும் போனார் மனிதர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அப்பேர்ப்பட்ட கருணாநிதி அவ்வளவு இறங்கி வந்து அழைத்தும் கூட விஜயகாந்த் பாராமுகம் காட்டியதோடு, மக்கள் நல கூட்டணியில் போய் இணைந்தது அவர் செய்த வரலாற்றுப் பிழை. அதன் விளைவை தேர்தலுக்கு முன்பே அனுபவிக்க துவங்கினார் விஜயகாந்த்.
அவரது கட்சி இரண்டாய் பிளந்தது, தேர்தலில் அவர் உட்பட கட்சியின் ஒருவர் கூட ஜெயிக்காமல் போனார்கள். தேர்தலுக்குப் பின் அவரது நிர்வாகிகள் கட்சியை விட்டு தலை தெறிக்க தப்பினார்கள். ஒரு காலத்தில் விஜயகாந்த் கட்சியின் மா.செ. பதவிகளெல்லாம் சிம்ம சொப்பனம். ஆனால் இப்போதோ கூப்பிட்டு கொடுத்தாலும் கூட காலில் விழுந்து மறுக்கிறார்கள் நிர்வாகிகள்.
மேலும் விஜயகாந்தின் குரல் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் தெளிவற்ற நிலை அவரது கம்பீரத்தை கன்னாபின்னாவென சரித்து சிதைத்திருக்கின்றன.
திகட்டத் திகட்ட அரசியலில் வெற்றியை சந்தித்தவர், இப்போது தொடர் தோல்விகளால் திணறிக் கொண்டே இருப்பதால் இப்போது மீண்டும் சினிமாவை நோக்கி அவர் நகர துவங்கியிருக்கிறார்.
இது ஹேஸ்யமல்ல. விஜயகாந்தே இதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் விஜயகாந்த் கலந்து கொண்டபோது ‘விஜயகாந்த் மறுபடியும் சினிமாவுல நடிக்க வரணும். நான் டைரக்ஷன் பண்ணனும்’ அப்படின்னு எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார். உடனே இயக்குநர் செல்வமணி எழுந்து ‘என் டைரக்ஷன்ல கேப்டன் நடிக்கணுமே!’ என்றதும், தாணு எழுந்து ‘கேப்டன் நடிக்கிறதா இருந்தால் அந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன்’ அப்படின்னார்.
”எல்லாரும் சேர்ந்து ஒரு தெலுங்குப் படத்தை பார்த்து வெச்சிருக்காங்க. அதை தமிழ்ல ரீமேக் பண்ணி நடிக்கலாமுன்னு முடிவு செய்திருக்கேன்.” என்று தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்புவதை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த்.
ஆனால் இதை அரசியல் விமர்சகர்களோ ‘அரசியலில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்வியே விஜயகாந்தை சினிமா பக்கம் திருப்பியுள்ளது. எந்த சினிமா மூலமாக ரசிகர்கள் செல்வாக்கை பெற்று அரசியலுக்குள் வந்து சாதித்தாரோ அதே சினிமா மூலம் மீண்டும் செல்வாக்கை திருப்பி எடுக்க நினைக்கிறார்.
ஆனால் அந்த நேரம் வேறு, இந்த நேரம் வேறு. அந்த விஜயகாந்த் கேப்டன், ஆனால் இந்த விஜய்காந்தோ?!...” என்று இழுக்கிறார்கள்.
ஹும் ஆனாலும் விஜயகாந்துக்கு இப்படியொரு நிலை வந்திருக்க கூடாதுதான்.