'இன்றிலிருந்தே விஜயகாந்துக்கு வீழ்ச்சிதான்...' அன்றே சொன்ன தீர்க்கதரிசி ஜெயலலிதா..!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2019, 12:41 PM IST
Highlights

தேமுதிகவுக்கு இன்றிலிருந்தே வீழ்ச்சிதான்.. அதை நாளை சரித்திரம்  சொல்லும் என ஜெயலலிதா சூளுரைத்த படியே அன்று முதல் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாகி வருகிறது தேமுதிகவின் நிலை. 

சட்டப்பேரவையில் நாக்கத்தை துருத்தி பல்லைக்கடித்து ஜெயலலிதா முன் முழங்கிய விஜயகாந்த். நாகரீகமின்றி நடந்துகொண்ட தேமுதிகவுக்கு இன்றிலிருந்தே வீழ்ச்சிதான்.. அதை நாளை சரித்திரம்  சொல்லும் என ஜெயலலிதா சூளுரைத்த படியே அன்று முதல் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாகி வருகிறது தேமுதிகவின் நிலை.

 

2005 ல் கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006ல் சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வென்றார். அப்போது தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 8.45. 2009 மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் நின்று அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழன்ந்தாலும் 10.8 சதவிகித வாக்குகளை பெற்றது தேமுதிக. 

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை வென்று எதிர்கட்சி தலைவராக விஜயகாந்தை உயர்த்தினார் ஜெயலலிதா. அப்போது தேமுதிக பெற்ற வாக்குகள் 7.8 சதவிகிதம். 2012ல் சட்டப்பேரவைக்குள் நாங்கள் மட்டும் இல்லையென்றால் அதிமுக ஜெயித்திருக்க முடியாது. இந்த ஆட்சி எங்களால் அமைக்கப்பட்டது என்கிற ரேஞ்சில் கையை மடக்கி நாக்கை துருத்தி நாகரீகமின்றி நடந்து கொண்டார் விஜயகாந்த். 

அப்போது பேசிய ஜெயலலிதா, ‘’தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதே வெற்றியைத்தான் நாங்கள் பெற்றிருப்போம்.

அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவது என தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதன்படிதான் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முடிவுகள் அமைந்தன. தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன; இத்தனை பேரவை உறுப்பினர்கள் இன்று இந்த அவையில் வந்து தேமுதிக சார்பில் அமர்ந்திருக்கின்றார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.

எனது கட்சிக்காரர்களை திருப்திபடுத்துவதற்காகவே இந்தக் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தேன். கூட்டணி அமையாவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. பேரவைத் தேர்தலில் எதைச் சாதித்துக் காட்டினோமோ, அதைவிடக் கூடுதல் இடங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்.

தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தேமுதிகவுக்கு இத்தனை உறுப்பினர்கள் கிடைத்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் தகுதியும் கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி சேராவிட்டால் தேமுதிகவுக்கு கடந்த தேர்தலில் ஒரு இடம்கூடக் கிடைத்திருக்காது.

தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.  எதிர்க்கட்சித் தலைவரும் அவருடைய சட்டப் பேரவை உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம், வரக்கூடிய ஏற்றம் எங்களால் வந்து முடிந்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்கு முகம்தான். அதைச் சரித்திரம் சொல்லும்” என்று ஜெயலலிதா பேசினார்.

 

அன்று ஜெயலலிதா சொன்னதுபோல் தேமுதிக தேய்ந்து கொண்டே வருகிறது. அடுத்த சில மாதங்களில் தேமுதிகவில் இருந்து பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான மு.அருண் சுப்பிரமணியன், செ.அருண்பாண்டியன், ஆர்.சாந்தி, ஆர்.சுந்தரராஜன், டி.சுரேஷ்குமார், க.தமிழழகன், க.பாண்டியராஜன், சி.மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அடுத்து விஜயகாந்துக்கு அரசியல் பாலபாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கட்சியை விட்டு விலகினர். 

அடுத்தடுத்து தேமுதிகவில் இருந்து விலகியவர்கள் திமுக, அதிமுகவில் ஐக்கியமாகினர். வாக்குசதவிகிதமும் குறைந்து கொண்டே வருகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 20 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று வாக்குசதவிகிதம் 5.19 ஆக குறைந்து போனது.

 

அடுத்து 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து 104 போட்டியிட்ட தேமுதிக 103 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அந்தத் தேர்தலில் 10 லட்சத்து 34 ஆயிரத்து 384 வாக்குகளை பெற்று 2.39 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அப்போது இருந்த நிலையை விட தற்போது தேமுதிகவின் நிலையை படுபாதாளத்திற்கு போய் விட்டது. இப்போது அதிமுகவுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கும்போதே திமுகவுடனும் பேரத்தை நடத்தியது அம்பலமானது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் விஜயகாந்தை பொம்மை போல் காட்டிவிட்டு கட்சிசார்ந்த முடிவு, கூட்டணி முடிவுகளை பிரேமலதா எடுத்து வருவதும் தேமுதிக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அதேபோல் வாரிசு அரசியலை எதிர்த்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த், அவரது கட்சியில் தலைவராக இருக்கிறார். மனைவி பொருளாளர், மைத்துனர் துணைப்பொதுச்செயலாளர், மகனுக்கு இளஞரணி பொறுப்பு என ஒரே குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் கட்சியில் முதல் நான்கு முக்கிய பொறுப்பில் இருந்து வருவதும் தேமுதிகவினரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆகையால், ஜெயலலிதா சொன்னது போல் இனி தேமுதிகவுக்கு வீழ்ச்சியே தவிர எழுவதற்கு வாய்ப்பே இல்லை.  
 

click me!