நாடே எதிர்பார்த்த ஜல்லிக்கட்டுக்கு நல்ல தீர்ப்பு.! தமிழ் மண்ணை,மக்களின் இதயத்தை குளிரவைத்துள்ளது- விஜயபாஸ்கர்

By Ajmal Khan  |  First Published May 18, 2023, 12:29 PM IST

ஜல்லிக்கட்டு நம் அடையாளம்; அதற்கு எத்தகைய தடை வரினும் அத்தனையையும் தகர்த்தெறிய உறுதியோடு களம் நின்ற அத்தனை அமைப்புகளுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், நம் உறவுகளுக்கும் என் இதயத்தின் நன்றியை காணிக்கையாக்குவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு போட்டி

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட பதிவில், நம் ஊனில், உயிரில், உதிரத்தில் கலந்திருக்கும் ஜல்லிக்கட்டு வழக்கில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு "நாடே எதிர்பார்த்த நல்ல தீர்ப்பை வழங்கி தமிழ் மண்ணை, மக்களின் இதயங்களை குளிர வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தபோது, நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டிட பல்வேறு அமைப்புகள் மனுதாக்கல் செய்தன; என் தரப்பு வாதங்களையும் பதிவு செய்ய நானும் இடையீட்டு மனு ஒன்றை கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தேன். 

Latest Videos

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நேரடியாக டெல்லி சென்று, ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் அண்ணன் பி.ஆர் அவர்களுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தருணங்கள் யாவும் நெஞ்சில் நிழலாடுகின்றன. உச்ச நீதிமன்றத்தில் ஆணித்தரமாக நம் உணர்வுகளை பிரதிபலித்த ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விழாக்குழுவினர் மனுவுக்கு ஆஜரான முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து அவர்களுக்கும், நான் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் ஆஜராகி, "ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மண்ணின்; மக்களின் உதிரத்தில் கலந்திருக்கும் கலாச்சார பெருவிழா என்பதையும், இதனை தமிழக அரசு, இந்திய அரசு, ஏன் நீதி மன்றங்களும் ஏற்றுக்கொண்டு சட்டமாக்கிய பின்னரும்; 

நம் மக்களுக்கான வெற்றி

பீட்டா போன்ற அமைப்புகள் எங்கோ அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அலுவலகங்களில் அமர்ந்துகொண்டு எங்கள் கலாச்சாரத்தை இவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்?" என உணர்வுப்பூர்வமாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத் ராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த அன்பை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நம் அடையாளம்; அதற்கு எத்தகைய தடை வரினும் அத்தனையையும் தகர்த்தெறிய உறுதியோடு களம் நின்ற அத்தனை அமைப்புகளுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், நம் உறவுகளுக்கும் என் இதயத்தின் நன்றியை காணிக்கையாக்குகிறேன். இது நமக்கான வெற்றி... நம் மண்ணுக்கான வெற்றி... நம் மக்களுக்கான வெற்றி... மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

click me!