ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்நோக்கத்துடன் இருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி அறிக்கை
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சட்டம் மற்றும் மருத்துவ துறை ஆலோசனைகளை தமிழக அரசு கேட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை சசிகலா ஏற்கனவே மறுத்துள்ளார்.
சசிகலா அதிருப்தி
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை; என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
மடியில் கனமில்லை- விஜயபாஸ்கர்
இந்தநிலையில் ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டுக்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துக்கள், சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னதைப் போலவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மடியில் கனமில்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என கூறியுள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் என்னை பற்றிய தகவல் முற்றிலும் உண்மையல்ல, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை உள்நோக்கத்துடன் இருக்கிறது. சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார். நேர்மையான, தூய்மையான களபணியாளர் அதிகாரி ராதாகிருஷ்ணன் எனவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்..! தீபாவளி வாழ்த்து சொல்லி மகிழ்ச்சி