மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்திட வேண்டும் என தமிழக அரசுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் நேற்றிரவு தவறி விழுந்து காயம் அடைந்த இளம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். திமுக தலைமையிலான அரசு மழைநீர் வடிகால் பணிகளை சரியாக திட்டமிட்டு முன்கூட்டியே முடித்து இருந்தால், இன்றைக்கு இந்த உயிரை நாம் இழந்து இருக்க மாட்டோம்.
இதையும் படிங்க: மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடாதீர்கள்... திமுகவை விளாசும் அண்ணாமலை!!
திமுக அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம். தமிழக அரசு இது போன்று பணிகள் முழுமையடையாத இடங்களை உடனே கண்டறிந்து அந்த இடங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் இது போன்று இனி எந்த உயிர் பலியும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, திமுக அரசு தமிழக மக்களின் உயிரோடு விளையாடாமல், இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கும் மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: திமுகவின் உட்கட்சிப் பிரச்னை நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது... ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!!
இதில், உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு, தமிழக அரசு அறிவித்துள்ள ரூபாய் 5 லட்சம் உதவி தொகை என்பது, அவரது இழப்பிற்கு எந்தவிதத்திலும் ஈடாகாது. எனவே, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இளம் பத்திரிகையாளர் முத்து கிருஷ்ணனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.