
அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் சிறை தண்டனை விதித்த சில மணித்துளிகளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் 8ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டு, தொழிற்சாலைகள், குவாரிகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை முன்னிலையில் ஆஜரானார். பின்னர் அவரது மனைவியிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையைத் தொடர்ந்து விஜயபாஸ்கருக்கு எதிரான ஆதாரங்களை வருமான வரித்துறை திரட்டியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வணிக வளாகம் வாங்கியதில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட அந்த வழக்கில், சுந்தரத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதனிடையே சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுந்தரம் அடுத்த சில நிமிடங்களில் ஜாமீன் பெற்று வீடு திரும்பினார்.