
கட்சியிலும் ஆட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை என்றும் பன்னீர்செல்வம் அணியிலிருந்து சிலர் தங்களது அணிக்கு வரவுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இரு அணிகளாக உடைந்தது. சசிகலா அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகிறது. இரு அணிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா சதுக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், கட்சியில் யாருடைய குடும்பத்தின் தலையீடும் இல்லை என்றும் பன்னீர்செல்வம் அணியிலிருந்து சிலர் தங்களது அணிக்கு வரவுள்ளதாக தெரிவித்தார். அடுத்த நான்கு ஆண்டு எடப்பாடி தலைமையிலான அரசு நீடிக்கும் எனவும் புரட்சி தலைவர் வழியில் ஜெயலலிதாவும், ஜெயலலிதா வழியில் நாங்களும் எடுத்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது என ஸ்டாலின் கூறிவருவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
கோவை குண்டு வெடிப்பு, சட்டக்கல்லூரி கலவரம், கொலை கொள்ளை போன்ற எந்த சம்பவமும் எங்களது ஆட்சியில் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், மேட்டூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செம்மலை எம்எல்ஏ தற்போது 15 அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்குவர தயாராக உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ''ஓட்ட படகை உப்பு வச்சு அடைச்சங்களாம்'' என்ற பழமொழி போல உள்ளது என தெரிவித்தார்.