
ஆர்.கே.நகரில் 85% ஓட்டுகளுக்கு தலா 4000 ரூபாய் வீதம் கொடுப்பதற்கான ஆவணங்கள் பிடிபட்டுள்ளதாகவும், அவை "கசிய விடப்பட்டுள்ளதாகவும்" செய்திகள் வருகின்றன.
ஏன் இந்த கண்ணாமூச்சி நாடகம்? இந்த தகவல் உண்மை என்றால் - இதனை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
"செய்தி என்ன?"
"அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளன. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான ஆவணங்களும் வெளியாகி உள்ளன" - என்று செய்திகள் கூறுகின்றன.
"ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 2017 என தலைப்பிட்டு, வேட்பாளர் டி.டி.வி. தினகரன், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை மற்றும் மொத்தம் பெற வேண்டிய வாக்குகளின் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆவணத்தின் மூலம் தேர்தலில் 85% வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய இருந்தது தெரியவந்துள்ளது.
வெளியாகி உள்ள ஆவணங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், மாநிலங்களவை எம்.பி., வைத்திலிங்கம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.
இந்தச் செய்தி உண்மை என்றால், இதனை வருமான வரித்துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதனடிப்படையில், தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தலை ரத்து செய்து, தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
வெளிப்படையாக செயல்படுவதை விட்டுவிட்டு மத்திய அரசு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதை நிறுத்த வேண்டும்.