
‘நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று சினிமாவில் பஞ்ச் டயலாக்கில் தெறிக்க விட்டார் விஜய். அதேப்போல் தேர்தலில் ஒரு தடவை வெற்றியை பார்த்துவிட்டவர், இப்போது அடுத்தடுத்து களமிறங்கி கலக்க முடிவெடுத்துவிட்டார்.
அதாவது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. அமோக வெற்றியை பெற்றாலும் கூட விஜய்யின் ‘மக்கள் இயக்க’த்தை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக களமிறங்கினர். விஜய்யின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி பிரசாரம் செய்த அவர்கள் சுமார் நூற்றைம்பது இடங்களில் வெற்றி பெற்றனர். சொல்லப்போனால் போட்டியிட்ட மொத்த இடங்களில் 80%க்கும் மேல் வெற்றி பெற்றனர். இது ஆளுங்கட்சியையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த உற்சாகத்தில் இதோ எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்க தயாராகிவிட்டது விஜய்யின் படை. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்திலும் கணிசமான இடங்களில் விஜய் தனது இயக்கத்தினரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து, அதற்கான பணிகள் போய்க் கொண்டுள்ளன. இடங்கள் கண்டறியப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.
இதனால் ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் கடந்த தேர்தலில் விஜய் டீமிடம் தோற்ற நாம் தமிழர் மற்றும் ம.நீ.ம. ஆகியோர் கடும் கடுப்பில் உள்ளனர். விஜய்யின் மேயர் தேர்தல் முடிவு பற்றி பேசும் அவரது இயக்க பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் “சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கேற்பது குறித்து கூடிய விரைவில் விஜய் அறிவிப்பார். பொதுமக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை எப்படி வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.” என்று புதிர் போட்டிருக்கிறார்.
விஜய்யால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் அவரது தந்தை சந்திரசேகரோ விஜய்யின் இந்த தீவிர அரசியல் மூவ் பற்றி “அவரைப் பத்தி நான் என்ன சொன்னாலும் பெரிய விவாதமாகிறது. இருந்தாலும், சமூக நலன் சார்ந்த அக்கறை விஜய்க்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அவர் நிச்சயம் நல்லது செய்வார்.” என்றிருக்கிறார்.
ஹும், ரஜினியும் இப்படியேதான் பில்ட்-அப் பண்ணிட்டிருந்தார்! அப்படிங்கிறது ஏனோ இப்ப நினைவுக்கு வருதே.