விஜய் மல்லையா கடனே வாங்கலங்க !  எந்த டாக்குமெண்ட்டும் எங்ககிட்ட இல்ல !!  கைவிரித்த நிதி அமைச்சகம் !!

First Published Feb 8, 2018, 12:08 PM IST
Highlights
vijay malliah debt in bank.No documents in finance ministry


இந்திய வங்கிகளில் கடன் பெற்று அதைத் திரும்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியுள்ள தொழிலதிபர்  விஜய் மல்லையா வாங்கிய கடன்கள் தொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் கைவிரித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா  இந்தியாவில் உள்ள ஏராளமான வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றிருந்தார். ஆனால் அந்த கடன்களை அவர் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு லண்டன் தப்பி ஓடிவிட்டார்.

தற்போது லண்டனில் சொகுசு வாழ்க்கை நடத்தி வரும் அவரை கைது செய்து இந்தியா கொண்டுவர மத்திய அரசால் இதுவரை முடியவில்லை.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிதி அமைச்சகத்திடம் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தற்பொழுது பதில் அளிக்கப்பட்டுள்ளது. 



அதில், விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் அளவு குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் எவை? யார் யாரெல்லாம் அவரின் கடனுக்குகாக வங்கிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்கள்? என்பது உட்பட எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள  தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர், நிதி அமைச்சகத்தின் பதில் தெளிவற்றதாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு   பதில் அளித்த நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்குவார் , மல்லையாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு பிப்ரவரி வரை  வங்கிகளிடம்  இருந்து  ரூ.8,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

 இவை அனைத்தும் தற்பொழுது வரை வராக்கடன்களாக இருக்கின்றன. இவற்றில் வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ 155 கோடியை வசூல் செய்துள்ளது  என எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்திருந்தார்.

தற்போது மல்லையா கடன் குறித்த எந்த    ஆவணங்களும் தங்களிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம்  கைவிரித்திருப்பது அவரை தப்பவைக்கும் முயற்சியா என கேள்வி எழுந்துள்ளது.

click me!