கொடுத்த வாக்கை காப்பாற்றாத கலெக்டர்.. மீண்டும் தொடங்கியது நெடுவாசல் போராட்டம்

First Published Feb 8, 2018, 11:30 AM IST
Highlights
neduvasal protest against hydrocarbon scheme will resume soon


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி அமைத்த ஆழ்துளைக் கிணற்றை மூட வலியுறுத்தி அக்கிராம மக்கள் ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார் கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு, வாணக்கண்காடு, கருக்காகுறிச்சி ஆகிய 5 இடங்களில் கடந்த 1996-2006 வரையிலான காலக்கட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்தது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், நெடுவாசல் அருகே உள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. விவசாய நிலத்திலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

நாளடைவில் நெடுவாசல் போராட்டம் வலுத்தது. நெடுவாசல் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவும் அதிகரித்தது. இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, 9 மாதங்களில் நெடுவாசல் கிராமத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் மூடப்படும் என எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தார். ஆனால், 9 மாதங்கள் நிறைவடைந்த போதிலும் ஆழ்துளை கிணறுகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதையடுத்து ஆழ்துளை கிணற்றை மூட வலியுறுத்தி நல்லாண்டார்கொல்லையில் உள்ள ஆழ்துளை கிணறு அருகே அக்கிராம மக்கள் நேற்று மாலை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 

click me!